சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் தேர்தல் ஆணையம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இன்றைய அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக அண்மையில் ஞானேஷ்குமார் பதவியேற்றார். இதனையடுத்து நாடு தழுவிய அளவில் அனைத்து தேர்தல் சார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஞானேஷ்குமார். இந்த ஆலோசனைகளின் போது தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். இதனடிப்படையில் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட மொத்தம் 12 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்.
வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள், போலி வாக்காளர்கள் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கேள்விகளை எழுப்பக் கூடும்.












Click it and Unblock the Notifications