வாக்கு எண்ணும் மையங்களுக்குள் பேனா, பென்சில் கொண்டு செல்லக்கூடாது.. அதிரடி கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (மே 4) சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா மற்றும் பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் 17C படிவம், நோட் பேட், எழுதும் நோட்டு புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. செல்போன், கால்குலேட்டர் , ப்ளூடூத் இயர் போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சிகரெட், மது, இ-சிகரெட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்ததையடுத்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
62 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் எவ்வித இடையூறுமின்றி அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள சூழலில், மையத்திற்குள் நுழையும் வேட்பாளர்களின் முகவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எழுதுவதற்கு தேவையான அடிப்படைப் பொருட்களான பேனா மற்றும் பென்சில்களைக் கூட உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முகவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைக் குறித்துக் கொள்ளவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 17C படிவம், குறிப்புகளை எழுதப் பயன்படும் நோட் பேட் மற்றும் எழுதும் நோட்டுப் புத்தகங்களை மட்டுமே முகவர்கள் எடுத்துச் செல்லலாம். பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் உள்ளே தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும்.
மற்றபடி, நவீன மின்னணு சாதனங்களான செல்போன்கள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எவ்விதமான தொழில்நுட்பக் கருவிகளுக்கும் அனுமதி கிடையாது. இது தகவல்கள் கசிவதைத் தவிர்க்கவும், மையத்தின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே 2 ஆம் தேதி முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications