தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்.. கள்ளக்குறிச்சியில் நீரில் அடித்து செல்லப்பட்ட மின்வாரிய ஊழியர்கள்!
கள்ளக்குறிச்சி: தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டாரை சரி செய்வதற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அரபிக்கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இது கடந்து செல்லும் பகுதியில் கனமழையை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வட மாவட்டங்கள் அதிக அளவு மழையை பெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது.

எனவே அணையிலிருந்து விநாடிக்கு சுமார் 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. வெளியேறும் உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் கரை ஓரமாக உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் மின் கம்பிகளை எடுத்து செல்ல முயன்ற மின்வாரிய ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
நேற்று திருவண்ணாமலை வாழவச்சனூர் பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக மின்சார கம்பியை எடுத்துவர மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் முயன்றுள்ளனர். இதில் இருவர் கரை சேர்ந்த நிலையில் ஒருவர் மட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார். கரைசேர்ந்த ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மூங்கில்துறைபட்டு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் திலீப்குமார் உட்பட மூன்று ஊழியர்கள் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றின் வழியாக மின் வட கம்பியை கொண்டு சென்றிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றனர். இதில் திலீப்குமார் தவிர 2 பேர் கரை சேர்ந்துள்ளனர். திலீப்பை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக வந்தவாசியில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. 20 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தவிர மாஞ்சோலையில் 40 செ.மீ, மணிமுத்தாறு அணை 30 செ.மீ, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 22 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 29 பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications