ஸ்டாலின் ஆட்சியில் 4 முதல்வர்கள்! லிஸ்ட் போட்டு! "Bye Bye ஸ்டாலின்" சொன்ன எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: "திமுக ஆட்சியில் நான்கு முதல்வர்கள்... மக்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்கள்?" என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சிப் பயணத்தில் இந்த கேள்வியை அவர் எழுப்பினார்.

மடத்துக்குளம் தொகுதிக்குள்பட்ட தாராபுரம் காவல் நிலையம் அருகே அலங்கியம் சாலையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ஸ்டாலின் பல பொதுக் கூட்டங்களில் திமுக கூட்டணி வெல்லும் என்று பேசுகிறார். பகல் கனவு காண்கிறார். தாராபுரம் வந்து மக்கள் வெள்ளத்தைப் பாருங்கள். மக்கள் ஆரவாரமும், மகிழ்ச்சியும் அதிமுக தேர்தல் வெற்றிக்கு சாட்சி.

edappadi palanisamy mk stalin dmk

கூட்டணி பலம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதிமுக மக்களுடைய பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆட்சிக்கு வர மக்களின் பலம் தான் தேவை. மக்கள்தான் நீதிபதிகள், அதுதான் இறுதியானது. யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் ஸ்டாலின் மக்களை நம்பவில்லை. கூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார்.

52 மாத ஆட்சி

52 மாத திமுக ஆட்சியில் தாராபுரம் தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டு வந்தார்களா? திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. இந்த ஆட்சியில் "கலெக்‌ஷன் கமிஷன் கரப்ஷன்" தான் நடக்குது. எல்லா துறையிலும் லஞ்சம். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?

குடும்ப ஆட்சி

திமுக குடும்ப ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன், துர்கா ஸ்டாலின் என்று நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின் மனைவியும் ஊடகங்களில் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு முதல்வர் இருந்தாலே தாக்குப் பிடிக்க முடியாது, நான்கு பேர் இருந்தால் எப்படி இருக்கும்..?

அதிகார மையங்கள்

இந்த அதிகார மையங்கள் தான் மக்களை வாட்டி வதைக்கிறது.

கருணாநிதி குடும்பம் பிழைக்க 8 கோடி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். வாரிசு அரசியல் தொடர்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வருகிறார்கள். இன்பநிதியையும் ஏற்றுக் கொள்வோம் என்கிறார் அமைச்சர் ஒருவர்.

கார்ப்பரேட் கம்பெனி

அப்படியென்றால், அது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனி தமிழகத்தில் தொடர வேண்டுமா? திமுக என்ற கம்பெனிக்கு மூடுவிழா நடத்துகின்ற தேர்தல் 2026 தேர்தல், செய்வீர்களா? (ஜெயலலிதா பாணியில்) பத்திரப்பதிவு துறையில் தனி ரேட் வைத்திருக்கிறார்கள். எவ்வளவுக்கு பதிவு செய்கிறீர்களோ, அதற்கு ஏற்ப தனி ரேட். பிளாட் போட்டால் பிரித்து ரேட் போடுகிறார்கள்.

மெகா ஊழல்

பத்திரப்பதிவில் மெகா ஊழல் நடக்கிறது, அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள். இதில் 2500 பார்களை திமுகவைச் சேர்ந்த ஒருவரே எடுத்துக் கொண்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

பாட்டிலுக்கு 10 ரூபாய்

ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

ஆயிரம் கோடி ரூபாய்

அமலாக்கத்துறை இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. அதன் பிறகு முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் முழுவதும் சோதனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ்டிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் வரி

குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்தி விட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். கரண்ட்டை தொட்டால்தான் ஷாக் அடிக்கும், திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர்.

37 ஆயிரம் ரூபாய்

அதிமுக ஆட்சியில் நகராட்சியில் ஆயிரம் சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய் கட்டணமாக இருந்தது. திமுக ஆட்சியில் 77 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார் ஸ்டாலின்.

மளிகை கடை பில்

நான் ஏனோ தானோ என பேசவில்லை. மளிகை கடையில் புள்ளிவிவரங்களை பெற்று வந்து பேசுகிறேன், இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி பஸ்ஸைத் தூக்கிக் கொண்டு வந்து பொய் சொல்வதாகப் பேசுவார்கள். பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 77 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 72 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய்.

கடலெண்ணெய் ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணெய் ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 400 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது.

கட்டுமானப் பொருட்களின் விலை

கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒரு யூனிட் எம்.சாண்ட் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 5500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 4500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு டன் கம்பி அதிமுக ஆட்சியில் 40 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய், ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் 6 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 10 முதல் 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சிமெண்ட் விலை

சிமென்ட் அதிமுக ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் 240 ரூபாய், திமுக ஆட்சியில் வெளி மார்க்கெட்டில் ஒரு மூட்டை 350 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். முதல்வர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. கட்டுமானத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதை பொருட்கள்

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனையாகிறது கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. முதலில் கஞ்சா இலையில் வரும், இப்போது சாக்லேட்டில் வருகிறது, சமீபத்தில் கூட அதனை போதை ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பலமுறை நான் முதல்வர் கவனத்துக்கு கொண்டு வந்தேன். திமுகவினர் பல பேர் இதில் ஈடுபடுவதாக தகவல் அதனால்தான் காவல்துறையால் இதனை தடை செய்ய முடியவில்லை.

கண்மூடினால் தூக்கம் போச்சு

திமுக பொதுக் குழுவில் ஸ்டாலின் பேசினார். "இரவில் கண்மூடி காலையில் விழிக்கும்போது திமுகவினரால் என்ன பிரச்னை வரும்" என்று அச்சத்துடன் கண்விழிப்பதாக அவரே சொன்னார். அப்படியென்றால் திமுகவினரின் அட்டகாசம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். அதனால்தான் போதையை தடை செய்ய முடியவில்லை. இதுக்கு அதிமுக அரசுதான் விடிவு காலம் தரும்.

கொள்ளை சம்பவம்

போதை அதிகமாகிவிட்டதால் மக்களுக்குப் பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. இதை தடுக்க அதிமுக ஆட்சி மலர வேண்டும். கொங்கு மண்டலத்தில் முதியோர் வசிக்கும் இடத்தை தேர்வு செய்து கொலை செய்து, கொள்ளையடித்து விட்டு செல்கிறார்கள். முழுமையான விசாரணை நடத்தவில்லை. போலீஸுக்கே பாதுகாப்பில்லை, 6 மாதத்தில் 6 போலீஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் மீது பயம் இல்லை

குற்றவாளிகளுக்கு போலீஸைக் கண்டு பயம் இல்லை. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் பயந்து கொண்டு இருந்தார்கள். வெள்ளி, தங்கம் விலை நிலவரம் போன்று கொலை நிலவரம் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன்.

10 ஆண்டுகளில் 12 லட்சம்

அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி கொடுக்கப்படும். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய் வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி. தமிழகம் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அதிமுக ஆட்சியே காரணம்.

கிராமங்களில் மருத்துவர்கள்

தமிழகத்தில் கிராமப் புறங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன் மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்பட்டது.

கொரோனா காலம்

அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம்.

கல்லூரி மாணவர்கள்

கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக் கொடுத்தோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை, தமிழகத்தில் மட்டும்தான் ஆல்பாஸ் போட்டோம். "உங்களுடன் ஸ்டாலின்" என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம்.

7 மாத ஆட்சி

இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப் போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் அரசு, ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது இந்த அரசு. "உங்களுடன் ஸ்டாலின்" மூலம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடந்தது. புதுக்கோட்டையில் அந்த மனுக்களில் வடை கட்டி கொடுக்கிறார்கள்.

நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின், ரத்து செய்தாரா? நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி, ரகசியம் சொன்னாரா? நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோடி கையெழுத்து பெற்று சேலம் பெத்தநாயக்கம் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாட்டில் வைத்தனர். அப்போது அந்த பேப்பர்கள், ஸ்டாலின் பேசும்போது பறந்துபோய் திமுகவினர் காலில் மிதிபட்டதுதான் மிச்சம்.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டு வந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? இதைத்தானே மனுவாக எழுதிக் கொடுத்தார்கள். தீர்வு கண்டாரா? எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்? சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர இப்படி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

வாக்குறுதி என்னாச்சு

வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுக அரசு. ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்.

ஏழை மக்கள் வாழ்வு மலர, அவர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று எண்ணுகிறோம்.

எம்ஜிஆர் காலம்

எம்ஜிஆர் காலத்தில் இருந்து தைப்பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கப்பட்டது, திமுக அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி சேலை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

தாராபுரம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டமாக நிறைவேற்றிக் கொடுத்தோம், அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டடங்கள் கட்டிக் கொடுத்தோம்.

அமராவதி ஆற்றில்

அமராவதி ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டது, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அமராவதி ஆற்றில் செல்லும் உபரிநீர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில் அதிகமான தடுப்பணைகள் கட்டப்படும்.

அமராவதி ஆற்றில் மூன்று பெரிய பாலங்கள் கட்டினோம். மின் மயானம் அமைத்துக் கொடுத்தோம், திருப்பூர் - தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புதிய நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு தாராபுரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு உயர்மட்டப் பாலம் கட்டி கொடுத்தோம்.

தாராபுரத்தில் 4 இடங்கள்

தாராபுரத்தில் நான்கு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கம் கட்டிகொடுத்தோம்.

முருங்கைக்காய் இருந்து முருங்கைப்பொடி தயாரிக்கும் தொழிற்சாலை, அமராவதி உபரி நீர் நீரேற்றம் மூலமாக உப்பார் அனைக்கு கொண்டுசெல்ல வேண்டும், காய்கறி கெடாமல் இருக்க குளிர்பதன கிடங்கு, தாராபுரம் வாரச்சந்தை புதுப்பொலிவுடன் அமைக்க வேண்டும், போன்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். கண்வலி கிழங்கு விதை விற்பனை செய்ய முடியவில்லை என்று நான் வரும் வழியில் விவசாயிகள் என்னிடம் தெரிவித்தனர்.

திமுக ஆட்சியில் என்ன நடந்தது

அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ 4600 ரூபாய்க்கு விற்பனையானது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு அமைச்சர் இதில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால், வெளி மாநில வியாபாரிகள் இங்கு வந்து வாங்க முடியவில்லை, அதனால் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது, கடும் மன உளைச்சல், வீழ்ச்சியில் இருக்கிறோம் என்றனர். திமுக இடைத்தரகர்களை வைத்துக் கொண்டு எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தையெல்லாம் அவர்கள் சுரண்டுகின்றனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பைபை ஸ்டாலின்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு சங்கத்தின் மார்க்கெட் கமிட்டியின் மூலமாக கண்வலி விதைகள் விற்பனை செய்வதற்கு அரசே ஏற்பாடு செய்யும். நல்ல விலை கிடைக்கும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்" என்று உற்சாகமாகப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+