சாமிக்கு அதிமுக மகளிர் கொடுத்த வரவேற்பை மறக்க முடியுமா.. பழசைக் கிளறும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈரோடு: அதிமுகவே ஒரு வன்முறை இயக்கம்தான். ஜெயலலிதா தூண்டுதலின்பேரில் சுப்ரமணியம் சாமிக்கு அதிமுக மகளிர் அணியினர் கொடுத்த வரவேற்பு மறக்க முடியாதது. அதேபோலத்தான் இப்போது சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா அடித்த விவகாரமும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
ஆனால் மறந்தும் மருந்துக்கு கூட அவர் சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை அடித்தது குறித்து கருத்தே தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா அடித்ததை மட்டுமே குறிப்பிட்டுப் பேசினார் இளங்கோவன்.

தீரன் சின்னலை நினைவு தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. அங்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா அந்த கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சசிகலா புஷ்பாவை அடித்தார் என்று அந்த பெண் எம்பியே நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார். உயிருக்கு பாதுகாப்பும் கேட்டுள்ளார். அதிமுகவின் இந்த அராஜக போக்கு தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே, தருமபுரியில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூன்று பேரை எரித்துக்கொன்றார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணிய சாமியை ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்து கூறினார் என்று ஜெயலலிதாவால் தூண்டி விடப்பட்ட அதிமுகவினர், நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு அநாகரீகமான வரவேற்பெல்லாம் கொடுத்தார்கள். அதுபோலத்தான் எம்பி சசிகலா புஷ்பாவை அடித்த விவகாரமும். அதிமுக ஒரு வன்முறை இயக்கம் என்றார் என்றார்.
ஜெயலலிதா அடித்ததைக் கூறிய இளங்கோவன் கூட்டணிக் கட்சியான திமுகவின் திருச்சி சிவா அடிபட்டதற்காக சசிகலா புஷ்பாவைக் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications