முறையற்ற பேச்சுக்கு ஒரு மன்னிப்பு கேட்பது பெரியார் பேரனுக்கு இழுக்கல்ல!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் ஜெயலலிதா வும் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியது பற்றி, இளங்கோவன் சொல்லிய கருத்து இன்று வில்லங்கமாகியிருக்கிறது.

மோடி - ஜெயலலிதா சந்திப்பு பற்றி முதலில் இது கள்ள உறவு, அதாவது அரசியல் கள்ள உறவு என்று இளங்கோவன் பேசினார். பின்னர் சென்னையில் நடைபெற்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய இளங்கோவன் மோடி - ஜெ சந்திப்பு பற்றி சிரித்துக் கொண்டே, "எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.. அதனால தப்பா நினைக்காதீங்க," என்று சொன்னது மகா ஆபாசமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. இது இன்னமும் யூ டியூப்பில் உள்ளது. இந்தப் பேச்சுக்கு மூன்று நாட்கள் கழித்து திடீரென்று அஇஅதிமுக போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.

EVKS Elangovan Should seek an apology for abusive speech

இளங்கோவனின் பேச்சு ஆபாசமானது. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த பேச்சு ஏதோ ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு என்று கண்டிப்பதைத் தாண்டி, இதில் இருக்கும் ஆணாதிக்கச் செருக்கும், திமிரும்தான் அதிகப்படியான கண்டனத்திற்குரியவை. கிட்டத்தட்ட 44 சதவிகித வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், செல்வாக்குமிக்க முதலமைச்சர் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இதனைத் தாண்டி இவ்விஷயத்தைப் பார்க்க வேண்டும்.

எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், அது நியாயமான, கொள்கை ரீதியான விமர்சனங்களாக இருந்தாலும், அறவே அவற்றை ஒழித்துக் கட்டும், சகிப்புத் தன்மை கிஞ்சித்தும் இல்லாத ஒரு சர்வ வல்லமை பொருந்திய தலைவரே, பெண் என்ற காரணத்தால் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றால், பொது வாழ்வில் உள்ள மற்ற பெண்களின் நிலைப்பற்றி யோசித்துப் பாருங்கள்!

மோடி - ஜெ சந்திப்பு பற்றிய இளங்கோவனின் கருத்தின் அடிநாதம் அதில் இருக்கும் ஆணாதிக்க புத்தியும், பெண்களுக்கு எதிரான மன நிலையும்தான். பொது வாழ்வில் இருக்கும், அவர் எவ்வளவுதான் செல்வாக்குடன் இருந்தாலும், ஒரு பெண் எதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதென்பதற்கு இதுவே சரியான உதாரணம்.

ஆனால் இந்த தரம்தாழ்ந்த விமர்சனங்கள் ஏதோ இளங்கோவனால்தான் தமிழக அரசியலில் அறிமுகமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி பேசிய பேச்சுக்கள் அக்மார்க் அவதூறு பேச்சுக்கள்.

EVKS Elangovan Should seek an apology for abusive speech

2004 ல் சோனியா காந்தி பிரதமராக வாய்ப்பிருந்தபோது, அப்படி அவர் பிரதமரானால், தான் தன்னுடைய தலைமுடியை முற்றிலுமாக மழித்துக் கொள்ளுவேன் என்று நயத்தகு நாகரிகத்தில் பேசியவர்தான் தற்போதய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். எத்தனை கேவலமான மனநிலை!

இன்றும் பாஜக எம் பி க்களும், சங் பரிவார தலைவர்களும், சோனியா காந்தியையும், ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்களையும் கண்டித்து வைக்கும் விமர்சனங்கள் அநாகரீகத்தின் உச்சம். தமிழகத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா, தந்தை பெரியார் பற்றி பேசிய பேச்சு இன்னமும் அப்படியேதான் யூ டியூப்பில் உள்ளது. இது ஆபாசமா, கண்ணியமா என்பதை தமிழிசை சவுந்தர்ராஜன்தான் விளக்க வேண்டும்!

திமுக, அஇஅதிமுக வின் ஆபாச பேச்சு பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு விதத்தில் இதன் மூல வேர் அண்ணாவிடம் இருந்துதான் தொடங்குகிறது. பிரதமர் நேருவும், இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் சந்தித்துப் பேசியபோது, ‘தம்பி, பண்டிதரோ (நேரு) மனைவியை இழந்தவர், பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும் சந்திக்கிறார்களாம், தனியாக அறையில் ஒரு மணி நேரம் பேசுகிறார்களாம். என்ன பேசியிருப்பார்கள், என்ன செய்திருப்பார்கள் தம்பி' என்ற அண்ணாவின் பேச்சு பிரசித்திப் பெற்றது. இதே போல அன்றைய ஒரு முன்னணி தமிழ் சினிமா நடிகையைப் பற்றி பொதுவெளியில் பேச்சு வந்த போது அண்ணா சொன்னது, ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியுமல்ல!'.

திமுகவிலிருந்து அஇஅதிமுக பிரிந்த போது எம்ஜிஆரை, திமுக தலைவர் மு.கருணாநிதி விமர்சித்தவையும், அதற்கான அஇஅதிமுகவின் எதிர்வினையும் ஆபாசத்தில் யாரை யார் மிஞ்சுவதென்ற போட்டியாகவே நிகழ்ந்தன. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்' என்பதுதான். 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் இருந்த வரையில் முரசொலியில் அனேகமாக தினமும், அஇஅதிமுக வை நடிகர் கட்சி என்றுதான் பிரசுரிப்பார்கள். ஆனால் அந்த அவதூறுகள் திமுக மீது மக்களிடம் இன்னும் மோசமான வெறுப்பலையைத்தான் உண்டாக்கின. எம்ஜிஆர் புகழை மேலும் மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றன.

1989 ல் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ‘ராஜீவ் காந்தியின் சினேகிதி ஜெயலலிதா' என்றுதான் குறிப்பிடுவார். திமுக அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி ஜெயலலிதா கேட்டுக் கொண்டே இருந்த காலகட்டம் அது.

இதில் அஇஅதிமுக ஏதோ சுத்த சுயம்பு என்று நான் சொல்ல வரவில்லை. தங்கள் பங்குக்கு அஇஅதிமுக வும் தமிழக அரசியலில் ஆபாச பேச்சுக்களை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இன்றல்ல, கடந்த 24 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் யார் திமுகவையும், கருணாநிதியையும் அதிகமாக ஆபாசமாக பேசுகிறார்களோ அவர்கள் அமைச்சர்களாவது அம்மா ஆட்சிக் காலத்தில் எழுதப்படாத தகுதி. 1993 ஏப்ரல் 21ம் தேதி அப்போதைய அஇஅதிமுக எம்எல்ஏ தென்னவன், ‘கூட்டிக் கொடுத்து சிலர் அரசியலில் ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். இந்தப் பேச்சைக் கண்டித்து அன்றைய தினம் காங்கிரசின் 60 எம்எல்ஏ க்களும், திமுக வின் ஒரே உறுப்பினரான பரிதி இளம்வழுதியும் விடிய, விடிய சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தென்னவன் அமைச்சரானார். இன்று அவர் திமுக வில் உள்ளார் என்பது வேறு கதை.

இதேதான் இன்று அஇஅதிமுகவில் அமைச்சர்களாக இருக்கும் பலரது கடந்த காலமும். ஜெயலலிதாவே இத்தகைய பேச்சுக்களை சட்டசபையிலேயே பேசியிருக்கிறார்.1995ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா பேசியது இன்னமும் அவைக் குறிப்பில் உள்ளது. முதலமைச்சர் ஏன் அப்போதய ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திப்பதில்லை என்ற விமர்சனம் அப்போது அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது.

இதற்கு பதில் சொன்ன ஜெயலலிதா இவ்வாறு கூறினார்:

‘நான் ஏன் ஆளுநரை அடிக்கடி சந்திப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. மே மாதம் 31ம் தேதி சென்னா ரெட்டி ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பிறகு ஒவ்வோர் மாதமும் நான் ஆளுநரை சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை நான் ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்த போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இதனால்தான் நான் அவரை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்' என்று பேசிய ஜெ வின் பேச்சு மிகவும் முக்கியமானது.

ஜெ.வுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி கொடுத்திருந்த காலகட்டம் அது. ஜெ மட்டுமல்ல, அஇஅதிமுகவின் அனைத்து மட்டத்திலும், அவர்களது பத்திரிகையான நமது எம்ஜிஆரிலும் இன்றும் திமுகவையும், கருணாநிதியையும் எத்தககைய அடை மொழிகளால் அழைக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பது அஇஅதிமுகவின் ‘கண்ணிய அரசிலுக்கு' கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறது.

ஆகவே தமிழகத்தில், இடதுசாரிகளைத் தவிர்த்து, வேறெந்த அரசியல் கட்சிக்கும் ஆபாச பேச்சுக்கள் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

இன்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு இளங்கோவன் பேச்சு ஆளும் கட்சிக்கு நன்றாகவே உதவிக் கொண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்த போது, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு சசிபெருமாள் மரணமும், அதனைத் தொடர்ந்த மதுவிலக்கு போராட்டங்களும் அரசுக்கு உதவின.

ஒரு கட்டத்தில் மதுவிலக்கு போராட்டங்கள் பூதாகரமாக வெடிக்கவே, இதில் நிலை தடுமாறத் துவங்கிய ஆளும் கட்சி இன்று இளங்கோவன் பேச்சை ஊதிப் பெரிதாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆளும் கட்சியை பொறுத்த வரையில் மக்களின் உண்மையான பிரச்சனைகளை யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் ஒரே இலக்கு. இதற்காக புதிது, புதிதாய் பிரச்சனைகள் உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இளங்கோவன் விவகாரம் முடிவுக்கு வந்தால், நாளைக்கு வேறோர் பிரச்சனை வெடித்துக் கிளம்பும். மக்களின் ஜீவாதார பிரச்சனகளை தீர்க்க முடியாத அரசுகளுக்கு இது வாடிக்கையான, அவர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும் தந்திரம்தான்.

கடந்த கால தமிழக வரலாற்றை அறிந்தால்தான் நிகழ்காலம் புரியும் என்பதாலேயே இவற்றையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. கொள்கை வழி அரசியல் அறவே மரித்துப் போன சூழல் இருப்பதால்தான் இத்தகைய தனி மனித தாக்குதல்கள் நடக்கின்றன.

சோனியா காந்தி என்ற பெண்மணி தலைவராக இருக்கும் ஒரு மாபெரும் கட்சியின் மாநிலத் தலைவரின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது, அருவருப்பானது, மக்களின் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை சிதறடிக்கக் கூடியது. இளங்கோவனின் கருத்தை சோனியா காந்தி ஆதரிக்கிறாரா என்று தெரியவில்லை. இதனை அகில இந்திய காங்கிரசும், சோனியா காந்தியும்தான் விளக்க வேண்டும். கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும், ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்புகளும், அஇஅதிமுக இப்பிரச்சனையை இப்போதைக்கு கைவிடாதென்பதையே காட்டுகின்றன. இது தீவிரமாவதற்கு முன் நாகரீகமாக ஒரு மன்னிப்பைக் கேட்டுவிடுவது பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் பேரனுக்கு இழுக்கல்ல!

- ஆர் மணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+