காங்கிரஸ் மேலிடம் அழைப்பு...டெல்லிக்கு விரைந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் !
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பை ஏற்று நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வருகிற மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவை வீழ்த்துவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து சட்டபேரவைத் தேர்தலை சந்திப்பதாக அறிவித்தது. மேலும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன்படி ஏற்கெனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த பேரவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்த மனித நேய மக்கள் கட்சி தற்போது திமுக கூட்டணிக்கு வந்துள்ளது. அந்த கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஓர் இடமும், பொன்குமார் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சிக்கு ஓர் இடமும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி தலைமையிலான சமூக சமத்துவ படை கட்சிக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் 13 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மேலிட அழைப்பை ஏற்று இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து திமுக, காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications