துயரமான நாள்..ராகுல்காந்தியை பார்த்து பயம்..மோடி அரசை வீழ்த்த மீண்டு வருவார்.. ஜோதிமணி ஆவேசம்
சென்னை: ராகுல்காந்தியைப் பார்த்து மத்திய அரசு பயந்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். லோக்சபாவிற்கு வரக்கூடாது என்பதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜோதிமணி, மோடி அரசை வீழ்த்த ராகுல்காந்தி மீண்டு வருவார் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முதல் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23 முதல் தகுதி நீக்கம் அமலுக்கு வருவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை அடுத்து லோக்சபா செயலாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராகுல்காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பிற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துயரமான தினம்
இன்றைய தினம் நரேந்திர மோடி ஜனநாயகத்தை படுகொலை செய்த துயரமான தினம் இன்று என்று கூறியுள்ள ஜோதிமணி, நீதிமன்றம் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று குற்றச்சாட்டியுள்ளார்.

உலகை உலுக்கும் ஊழல்
ராகுல்காந்தி லோக்சபாவிற்கு வந்து அதானி பற்றி பேசுகிறார். அதானியின் ஊழல் நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி லோக்சபாவிற்கு வரக்கூடாது, அவரது குரல் ஒலிக்கக்கூடாது என்று இப்படி செய்து உள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை
இதே போல 1922 ல் மகாத்மா காந்தி மீது தேச துரோக வழக்கு பொய்யாக போடப்பட்டது. அந்த வழக்கிற்கு இதே போல 2 ஆண்டுகாலம் தண்டனை விதித்தனர். அதில் இருந்து போராடி வெற்றி பெற்றார் மகாத்மா காந்தி. அது போல ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.

மோடி அரசை வீழ்த்துவார்
மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம். ராகுல்காந்தியை பார்த்து மோடி அரசு பயந்து விட்டது. பாரத் ஜோடா யாத்திரைக்குப் பிறகு அவர் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார். அவர் பிரதமர் வேட்பாளராக வரக்கூடாது, லோக்சபாவிற்கு வரக்கூடாது என்பதற்காகவே இப்படி பழிவாங்கப்பட்டுள்ளார். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. ராகுல்காந்தி இதில் இருந்து மீண்டு வந்து மோடி அரசை வீழ்த்துவார் என்றும் ஜோதிமணி எம்.பி ஆவேசத்துடன் கூறினார்.












Click it and Unblock the Notifications