ஐடி, அமலாக்கத்துறைக்கு பயந்து அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஆர்எஸ் பாரதி விளாசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தம் மீதும் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த... கூட்டணிக்குச் சம்மதித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன'' எனச் சொல்லியிருக்கிறார்.

ER

வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடக்கம்

'தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை' என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த... கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

ஒரே ஒரு தேர்தலில் வென்றாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், 'ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன' என ஜோசியம் சொல்கிறார்!


தொடர் தோல்விகளை சந்தித்த 'தோல்விசாமி'

தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, '11-ஆவது தோல்வி பழனிசாமி' என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தைவிட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் 'தோல்வி'சாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?


நாற்காலி சண்டையை ஞாபகம் இருக்கிறதா?

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற 'நாற்காலிச் சண்டை'யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது. அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார்.

அதிமுகவின் குடும்பிடி சண்டையை மறக்கலாமா?

தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை'' என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ''மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?'' என அ.தி.மு.க.வில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.


உளறல் முத்து மாஜி அமைச்சர்கள்

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

இரட்டை இலையை முடக்கியவருக்கு துணை முதல்வர் பதவி

"பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது'' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த... 11 எம்.எல்.ஏ-க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவியை அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.

18 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை பறித்தவர்

எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி

முன்னதாக தமிழக சட்டசபையில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. துயரங்கள் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சாட்சி. தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அதிமுக ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரம் தலைவிரித்து ஆடியதை யாரும் மறக்கவில்லை. இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

உரிமைகளை அடகு வைத்த அதிமுக

ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தவர்கள் அதிமுகவினர். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளது. திமுக ஆட்சியில் 15,899 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவாக chargesheet பதிவு செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஆட்சிக் கால குற்றங்கள்

அதிமுக ஆட்சியில் 55,925 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 91,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்ற 17,537 கடைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் எந்த காரணத்தை கொண்டும், மதவாதம் உள்ளே நுழைய முடியாது! முடியாது! முடியாது! பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்தான் அதுபோன்ற நடவடிக்கைகள் மேலோங்கி இருக்கின்றன. ஆனால், அதுசார்பில் பிரதமர் அப்பகுதிகளை ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+