சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கடைக்குள் 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி- ரூ. 300 கோடி வரை சேதமாம்!
சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை, ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தி. நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. 300 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீகுமரன் தங்க நகைமாளிகையில் 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி, ரூ. 20 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகைக்கடையில் உள்ள லாக்கரில் உள்ள நகைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கட்டிடத்தை இடிக்கும் போதுதான் நகைகளை மீட்க முடியும் என்றும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 மணி நேர போராட்டம்
ஏழு மாடிகள்கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், நேற்று அதிகாலை தீ பிடித்தது. தரை தளத்தில் பிடித்த தீ ஏழு மாடிக்கும் பரவியது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி செய்தும் 36 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது.

உடைந்த கட்டிடம்
இன்று அதிகாலை 3.20 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம், 7வது தளத்திலிருந்து 2வது தளம் வரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. முன்பக்கமும் துண்டு துண்டாக உடைந்து விழுந்துள்ளது.

போலீஸ் வழக்கு பதிவு
சென்னை சில்க்ஸ் கட்டடம், விதிமுறையை மீறி கட்டியதாகப் புகார்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில் மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில், தீ விபத்து என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

ரூ.80 கோடி துணிகள் நாசம்
தரைத் தளத்திலிருந்த நகைக்கடையில் இருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கின. துணிக்கடையிலும் குடோனிலும் தீ பரவியது. 7 தளங்களிலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் புகைமூட்டம் ஏற்பட்டது. சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இருந்த 80 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகி விட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

400 கிலோ தங்கம்
நகைக்கடையில் 400 கிலோ அளவிற்கு தங்க நகைகள் இருந்ததாகவும், 2000 கிலோ அளவிற்கு வெள்ளிப் பொருட்கள் இருந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காப்பீடு செய்யப்பட்டுள்ளது
நகைகள், துணிகளுக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைக்குள் 150 டிகிரி வரை வெப்பம் சூழ்ந்துள்ளதால் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாக்கரில் தங்கம், வைரம்
நகைக்கடையில் உள்ள லாக்கரில் உள்ள நகைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கட்டிடத்தை இடிக்கும் போதுதான் நகைகளை மீட்க முடியும் என்றும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications