முதன்முறையாக 5 முனைப் போட்டிக்கு தயாராகும் தமிழகம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் தற்போதைய சூழ்நிலையின் படி தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
1. அதிமுக (இடதுசாரிகளை கழற்றிவிட்டதால் தனித்துப் போட்டி)
2. திமுக கூட்டணி (திமுக- புதிய தமிழகம்- இந்திய தேசிய முஸ்லீம் லீக்- விடுதலை சிறுத்தைகள்- மனித நேய மக்கள் கட்சி)
3. பாஜக கூட்டணி (தேமுதிக, பாமக, மதிமுக.. இதில் யார் இருப்பர், யார் வெளியேறுவர் என்பது தெரியவில்லை)
4. காங்கிரஸ் (தனித்து விடப்பட்டுள்ளது)
5. இடதுசாரிகள் (இவர்கள் கதியும் காங்கிரஸ் கதி தான். வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டி. திமுக கூட்டணியில் இணையும் சாத்தியமும் கொஞ்சம் உள்ளது)

மும்முனைப் போட்டி...
1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் பாமக, மதிமுக, பாஜக ஆகியவை இடம் பெற்றிருந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதனால், தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவியது.

இருமுனைப் போட்டி...
அதனைத்தொடர்ந்து, 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, பாமக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதனால் இருமுனைப் போட்டி நிலவியது.

தே.மு.தி.க.வின் வருகை...
2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 2005ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க. 10.3 சதவீத வாக்குகளை பெற்றது

நான்கு முனைப் போட்டி...
2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அதிமுக- மதிமுக- பாமக- கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் கண்டன.
பாரதீய ஜனதா கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவியது.

இப்போதைய தேர்தல் களம்...
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட உள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரச்சாரமும் தொடங்கிவிட்டார்.

திமுக கூட்டணி...
அதேபோல், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வேட்பாளர் பெயர் பட்டியல்...
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்கள் போக மீதமுள்ள 35 இடங்களுக்கான தங்களதுவேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார்.

இடதுசாரிகள்...எதுவும் நடக்கலாம்:
இதுபோக, கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் இம்முறை தொகுதிப் பங்கீடு காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளனர். திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடப்பட்ட போதும் தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சித் தெரிவித்துள்ளது. ஆனாலும் எதுவும் நடக்கலாம்.

பாஜக கூட்டணி... என்ன வேணா நடக்கலாம்:
தேசியக் கட்சியான பாஜக தனது கூட்டணியைத் தமிழகத்தில் வலுவாக்கும் பொருட்டு தேமுதிக, பாமக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வழக்கமாக கூட்டணி சேர்ந்துவிட்டுத் தான் தொகுதிப் பங்கீடு நடக்கும்.
ஆனால், பாஜக கூட்டணியில் பாமக முதலில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு கூட்டணிக்கு வந்து, தொகுதிச் சண்டை போட்டுக் கொண்டுள்ளது. தேமுதிகவும் 16 தொகுதிகள் வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே வந்து அடிதடி நடத்திக் கொண்டுள்ளது.
அதன்படி, பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி வரும் 13ம் தேதி அறிவிக்கப் பட உள்ளது. இந்தக் கூட்டணியில் எதுவும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் வெளியே போகலாம். போகாமலும் இருக்கலாம்.

காங்கிரஸ் நிலை....
திமுகவுடம் மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்ற கனவு கைகூடாத நிலையில், தேமுதிகவும் பாஜக வசம் சென்று விட கூட்டணி இன்றி தமிழக காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. எனவே அக்கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது.

முதன்முறையாக 5 முனைப் போட்டி....
இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக ஐந்து முனைப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications