சசிகலாவின் தாய்மாமா வீட்டில் ஐ.டி ரெய்டு... பெட்ரோல் பங்கில் டோக்கன்கள் பறிமுதல்!!
தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்த மல்லி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள சசிகலாவின் உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் நேற்று சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர்
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தாய்மாமன் தங்கவேலுவின் மகன் டிஏடி.அன்பழகனின் பண்ணை வீடு திருவாரூர் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. இந்த வீட்டுக்கு வருமான வரித்துறை இணை ஆணையர் இளையராஜா மற்றும் திருவாரூர் வருமான வரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று காலை சோதனையிடுவதற்காகச் சென்றது.
2 மணிநேரம் சோதனை
அன்பழகனின் வீடு பூட்டப்பட்டிருந்தது ஆனாலும் அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர் அன்பழகனின் உதவியாளர் தங்கவேல்ராஜா வீட்டின் சாவியைக் கொண்டு வந்து கொடுத்த பின்னர் பூட்டை திறந்து சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் மவுனம்
சோதனை நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து அதிகாரிகள் நேற்று மதியம் புறப்பட்டுச் சென்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது பற்றியும், சோதனை குறித்து ஆணையர் இளையராஜாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அடுத்தடுத்து சோதனை
மன்னார்குடியில் ஜெயலலிதா பேரவை திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொன்வாசுகிராம் வீட்டில் வியாழக்கிழமையன்று சோதனை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்கில் சோதனை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள பாப்பாநாட்டில் அதிமுக பிரமுகரான சோழகன் குடி காட்டைச் சேர்ந்த சிவராஜாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.
டோக்கனுக்கு பெட்ரோல்
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இந்த பெட்ரோல் பங்க்கில், டோக்கன்கள் கொடுத்து பலரும் பெட்ரோல் நிரப்பிச் செல்வதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானிக்கு புகார் சென்றதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
602 டோக்கன்கள் பறிமுதல்
ஒரத்தநாடு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சகாயராஜ், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அடங்கிய குழுவினர், அந்த பெட்ரோல் பங்க்கில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 602 டோக்கன்களை பறிமுதல் செய்ததுடன், பெட்ரோல் பங்க்குக்கு சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications