பழங்குடியின பெண்களிடம் வன அதிகாரிகள் தவறாக நடக்கவில்லை - வனத்துறை அமைச்சர் சீனிவாசன்
சென்னை: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பழங்குடியின பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் தவறாக நடந்துக் கொண்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபையில் கூறிஉள்ளார்.
தேனி மாவட்டம் மேகமலைச்சரகத்துக்கு உட்பட்ட கடமலைக்குண்டு மலைவாழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வனத்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, கடமலைக்குண்டு பகுதி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் சோதனை என்ற பெயரில் பெண்களின் ஆடைகளை களைந்ததாக வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இப்பிரச்சனையை திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தமிழக சட்டசபையில் எழுப்பினார். ஆஸ்டின் கேள்விக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
கடமலைக்குண்டு பழங்குடியின பெண்களிடம் அதிகாரிகள் தவறாக நடந்துக் கொண்டதாக கூறப்படுவது தவறானது என்று கூறிய அமைச்சர் சீனிவாசன், பழங்குடியின மக்கள் வனஅதிகாரிகள் அலுவலக பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள் தாக்கியதில் வன ஆய்வாளர் சுபாஷ் காயம் அடைந்து உள்ளார். புகார் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் வன அதிகாரிகள் தவறாக நடந்துக் கொள்ளவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பழங்குடியின பெண்களிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது. மேகமலையில் எறுப்பு திண்ணிகள் கடத்தல் என்ற தகவலால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மட்டுமே நடத்தினர் என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications