மகளுக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பு- விவசாயி தீக்குளிக்க முயற்சி
நெல்லை: நாங்குநேரியில் பிறப்புச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்தால் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகள் சங்கீதா நாங்குநேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளியில் பிறப்பு சான்றி கேட்டுள்ளனர். ஆனால் பிறப்பு சான்றிதழில் சங்கீதாவின் பெயரை பதிவு செய்யாததால் பெயரை சேர்த்து வருமாறு பள்ளியில் கூறியுள்ளனர். இதனால் அவரது தந்தை திருக்குறுங்குடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து தடையில்லா சான்று வாங்க நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார் கண்ணன். ஆனால் தடையில்லா சான்று வழங்காமல் காலம் கடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பள்ளி செல்ல மாட்டேன் என அவரது மகள் கூறியதால் பதட்டமடைந்த கண்ணன் மாலை மீண்டும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டார். ஆனால் அதிகாரிகள் சான்றிதழை தரவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து கொண்டு தனது மேல் ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாலுகா அலுவலக ஊழியர்கள் அவரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி சான்றிதழ் தர நடவடிக்கை எடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். ஆனால் மகளின் எதிர்காலத்தை எண்ணி வருந்திய அவர் மீண்டும் தீக்குளிக்க முயன்றதால் விரைந்து வந்த தாசில்தார் அவரை சமாதானப்படுத்தி உடனடியாக சான்றிதழை வழங்கினார்.












Click it and Unblock the Notifications