‘அக்ரி’ படித்து... ஏ.ஓ.வாக பணியாற்றி... அமைச்சராக உயர்ந்து... அரெஸ்ட் ஆன கிருஷ்ணமூர்த்தி!
சென்னை: வேளாண்துறை அதிகாரி முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை அழைத்துச் செல்லப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செந்திலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைதாகியுள்ள கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். கோயம்பத்தூர் விவசாய கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி படித்த கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறையில் ஏ.ஓவாக பணியாற்றினார். பணியின் போது ஊழல் செய்தார் என அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
எம்.ஜி.ஆர் இறந்து அதிமுக உடைந்த சமயத்தில், தனது பணியை ராஜினாமா செய்த கிருஷ்ணமூர்த்தி அதிமுகவில் ஜெயலலிதா அணியில் இணைந்தார்.
பின்னர், சேவல் சின்னத்தில் கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏவுக்கு நின்று தோல்வியை சந்தித்தார். அதன்பின் கவுன்சிலாக தேர்வு செய்யப்பட்டார். எம்.பி. தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவினார்.
அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2006 வரை கலசப்பாக்கம் ஒன்றிய சேர்மனாக இருந்தார். 2006 முதல் 2011 வரை கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார்.
2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது உணவுத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, பின் பள்ளிக் கல்வித்துறை, வணிகவரித்துறை அமைச்சர் என வேறு வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டார். பின்னர் அதிரடியாக கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப் பட்டன.
2014 எம்.பி தேர்தலின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட வனரோஜாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என கண்டிஷன் போடப்பட்டு மீண்டும் கிருஷ்ணமூர்த்திக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அத்தேர்தலில் வனரோஜா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்மைத் துறை தரப்பட்டது.
மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்ந்த கிருஷ்ணமூர்த்தி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதால் சர்ச்சையில் சிக்கினார் கிருஷ்ணமூர்த்தி. மீண்டும் அவரது அமைச்சர் பதவி பறிக்கப் பட்டது. தற்போது அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமனைவி, 3 மகன்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications