சுற்றுலா பயணிகள் தான் குறி.. போதைக்காளானை தேடி கொடைக்கானல் வரும் இளைஞர்கள்.. கூரியர் சர்வீஸ் வேறு
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதைக்காளான் விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். போதைக்காளான் கேட்டு தேடி தேடி வந்து இளைஞர்கள் வாங்கி வந்ததும், கூரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விஷயத்திற்கு பேமஸ் என்பது போல், கொடைக்கனால் மலைகளின் இளவரசி என்பதால் சுற்றுலாவிற்கு தான் பேமஸ். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கொடைக்கானலில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்கும் கும்பல் இயங்கி வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கொடைக்கானலுக்கு தேடி வந்து கஞ்சா மற்றும் போதைக்காளான் வாங்கும் நிலை இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைக்காளான் தேடிச் சென்ற இளைஞர் வனப்பகுதியில் சிக்கினார். அவரை மீட்ட போது தான் போதை காளான் கும்பல் சுற்றுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையால் போதைக்காளான் கும்பல் எஸ்கேப் ஆனது. ஆனால் மீண்டும் போதைக்காளான் விற்கும் கும்பல் நடமாட்டம் கொடைக்கானலில் அதிகரித்துள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. மதுமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போதைக்காளான் விற்பனை எங்காவது நடைபெறுகிறதா என்று ரகசியமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் ஏழு ரோடு ஜங்சன் பகுதியில் போதைக்காளானை ரகசியமாக விற்ற, கல்லுக்குழியை சேர்ந்த 56 வயதாகும் சுரேஷ், பள்ளங்கி மாட்டுப்பட்டியை சேர்ந்த 32 வயதாகும் தங்க துரை ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், கோக்கர்ஸ் வாக் பகுதியில் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்ட சாலமன் (53), ஜெயந்தி (43), விக்டோரியாராணி (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. போதைக்காளான் விற்பனைக்கு தங்க துரை மூளையாக செயல்பட்டார் என்பதும் சாலமன் மற்றும் அவரது குடும்பத்தினர், கூரியர் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. ரகசியமாக போதைக்காளான்களை கூரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளார்கள்.
தெரிந்த நபர்களுக்கு மட்டுமே போதைக்காளான் விற்றுள்ளனர். மேலும் வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அதிக அளவில் வெளியே தெரியாதவாறு போதைக்காளான்களை நூதன முறையில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அருண் (35), ஹெலன்மேரி (23) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications