பாஸ் கேட்ட வேலுமணி.. எழுந்து நின்று உதயநிதி சொன்ன வார்த்தை.. வெடித்து சிரித்த அவை
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், உங்கள் நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதாக கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக கொறாடா எஸ்.பி வேலுமணி, ஐபிஎல் போட்டிகளை பார்க்க அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக எஸ்.பி வேலுமணி கூறுகையில், "அதிமுக ஆட்சியில் 400 பாஸ்கள் எம்.எல்.ஏக்களுக்ககாக கொடுக்கப்பட்டதாகவும் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் பாஸ்கள் கொடுப்பது இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் தேவை" என்று கூறியிருந்தார்.
எஸ்.பி வேலுமணியின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "4 வருடமாக சென்னையில் போட்டியே நடக்கவில்லை. நான்கு வருடத்திற்கு பிறகு இப்போதுதான் போட்டி நடைபெறுகிறது. நான் என்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு போட்டிக்கும் எனது தொகுதியில் இருந்து கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் 150 பேரை நான் போட்டியை காண ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறேன். ஐபிஎல் நடத்துவது பிசிசிஐ. உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் அதன் ஹெட் ஆக இருக்கிறார்.

நாங்க சொன்னால் அவர் கேட்க மாட்டார். எனவே நீங்கள் அவரிடம் பேசி அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு 5 டிக்கெட் கொடுத்தால் கூட போதும்.. நாங்க காசு கொடுத்துக் கூட வாங்கிக் கொள்கிறோம். இல்லைன்னா அதை வேற எதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்.." என்றார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சால் சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலின் வேலுமணிக்கு சுவாரசியமாக கொடுத்த பதிலை புன்முறுவலுடன் சிரித்தபடியே கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தார்.
முன்னதாக விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் பதிலளித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டை வடக்கில் இருந்து வந்தவர்கள் யாரும் வென்றது கிடையாது. மாநில விளையாட்டு போட்டிகள் விரைவில் நடத்தப்படும். தமிழகத்தில் கேப்டனாக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்.
எப்போதெல்லாம் டிபன்ஸ் ஆட வேண்டும், எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்சரை அடித்த முதல்வர் ஸ்டாலின், டெல்டா நிலக்கரி சுரங்கம் ரத்து என இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications