பார்க்க டிப்-டாப்.. கஞ்சா விற்கும் இளைஞரை காதலித்து ஏமாந்த மருத்துவ மாணவி.. தொலைந்த வாழ்க்கை!
காதலித்த தவறான இளைஞனால், இளம்பெண் மருத்துவப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தென்காசி: மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்கும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையைத் தொலைத்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.
இளைஞரின் பின்புலம் தெரியாமல் அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் எந்த வேலையிலும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அதோடு கூடுதல் ஷாக்காக அந்த இளைஞர் கஞ்சா விற்பனை செய்து வருவதை அறிந்து அதிர்ந்து போயுள்ளார் அந்த இளம்பெண்.
தற்போது அந்த இளம்பெண் தனது மருத்துவர் ஆகும் கனவையும், எதிர்கால வாழ்க்கையையும் இழந்து தவித்து வருகிறார்.

கஞ்சா விற்கும் இளைஞர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் சுபாஷ் (25). பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய சுபாஷுக்கு தீய நண்பர்களின் சகவாசம் கிடைத்தது. இது, அவரை கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்களுடனும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருகட்டத்தில், வருமானத்துக்காக தானும் கஞ்சா விற்பதை பார்ட் டைமாக செய்ய ஆரம்பித்திருக்கிறார் சுபாஷ். ஆனால், அவர் என்ன வேலை பார்க்கிறார் என்பது அவரது பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

டிப் டாப் உடை
கஞ்சா விற்று ஊர் சுற்றுபவராக இருந்தாலும் எந்நேரமும் டிப் டாப் உடையிலும், விலை உயர்ந்த பைக்கிலும் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சுபாஷ். அந்த சமயத்தில்தான், சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தென்காசியை சேர்ந்த இளம்பெண்ணை பார்த்திருக்கிறார் சுபாஷ். பார்த்ததும் பிடித்துப் போகவே, அவரை பின்தொடர்ந்து சென்று அப்பெண்ணிடம் தனது காதலை உணர்த்தியிருக்கிறார் சுபாஷ்.

காதல் வலையில் வீழ்ந்த பெண்
ஒருகட்டத்தில், சுபாஷை அந்தப் பெண்ணுக்கும் பிடித்துப்போனது. டிப் டாப் உடையையும், அவரது பைக்கையும் பார்த்து ஏதோ ஒரு நல்ல வேலையில் இருக்கும் இளைஞர் என அந்தப் பெண் நினைத்திருக்கிறார். பின்னர் தான், சுபாஷுக்கு வேலை இல்லை என்ற உண்மை அப்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. இருந்தபோதிலும், காதல் அவர் கண்ணை மறைத்தது. மேலும், சுபாஷும் தனக்கு சீக்கிரமே நல்ல வேலை கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார். இதனை அப்பாவியான அந்த இளம்பெண்ணும் நம்பியிருக்கிறார்.

பாதியில் நின்ற மருத்துவப்படிப்பு
சென்னைக்கு சென்று மருத்துவக் கல்லூரியில் படிப்பதும், பின்னர் விடுமுறைக்கு தென்காசிக்கு வந்து சுபாஷுடன் காதலை தொடர்வதுமாக அப்பெண் இருந்திருக்கிறார். இந்நிலையில், இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனது காதல் கைகூடாதோ என்ற பயத்தில் யாருக்கும் தெரியாமல் சுபாஷை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அந்தப் பெண். தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் அவரது பெற்றோரும் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் படிப்பை தொடர முடியாமல் மருத்துவப் படிப்பை பாதியிலேயே விடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தொலைந்து போன வாழ்க்கை
இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு கையில் கஞ்சா பொட்டலத்துடன் சுற்றி வந்த சுபாஷை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், சுபாஷின் மனைவிக்கு போன் செய்த போலீசார், நடந்த விவரங்களை கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், காவல் நிலையத்துக்கு சென்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனது கணவர் மிகவும் நல்லவர்.. அவர் கஞ்சா விற்கும் நபர் அல்ல. நீங்கள் அவர் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளார் அப்பெண். ஏதும் தெரியாத அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட போலீஸார், சுபாஷின் கஞ்சா விற்பனை பற்றி எடுத்துக் கூறியுள்ளனர். அப்போதுதான், தவறான நபரை காதலித்து ஏமாந்துவிட்டோம் என்ற உண்மை அப்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications