இட்லி மாவு பாக்கெட் போட ரேஷன் அரிசி தான் கிடைச்சதா? கள்ளக்குறிச்சிக்கு ஆச்சரியம் தந்த 70 டன் மூட்டை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததால், போலீசார் தீவிரமான ரோந்து மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த வாகனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
தமிழகத்தில், ரேஷன்தாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் மாத மாதம் வழங்கப்படுகின்றன. எனினும், ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது அதிகரித்தவாறே உள்ளது. தமிழக எல்லைகளில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்கு புரோக்கர்களும் அதிகரித்தவாறே உள்ளதால், ரேஷன் அரிசி, பருப்பு முறையாக உரியவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

இந்த ரேஷன் அரிசிகள், கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, பாலிஷ் செய்து, அதையே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, திரும்ப நமக்கே விற்கப்படுகிறதாம்.. இப்படி பாலிஷ் செய்யப்பட்ட அரிசி என்று தெரியாமல் கேரளாவிலும் அப்பாவி மக்களுக்கு சில கடைக்காரர்கள் விற்றுவிடுகிறார்களாம்.
தேனியில் மூட்டை மூட்டையாக அரிசி
அதேபோல, ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி, அதை இட்லி மாவு அரைக்கவும் பயன்படுத்தி கொள்கிறார்களாம்.. இதற்காகவே, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசி வாகனங்களில் வைத்து விநியோகிக்கப்படுகிறது. அதனால்தான், எல்லைகளில் ரேஷன் அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், போலீசார் தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர்.
ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலையும் கிடைப்பதால், தேனி மாவட்ட எல்லையில் இதுபோன்ற கடத்தல்கள் தொடர்ந்து நடக்கின்றன.. தேனி, ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் கண்காணிக்கப்படுகிறது. கடந்த வாரம்கூட, கம்பம்மெட்டு மலைச்சாலையில் உத்தமபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 1150 கிலோ பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் ரேஷன் அரிசி
திருப்பூரிலும் இந்த அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.. குடும்பத்துடன் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்கள், தமிழர்களிடமிருந்து ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதை சமைத்து சாப்பிட்டு வந்தனர். இப்போது இவர்களாகவே ரேஷனில் கார்டுகள் மூலம் அரிசி பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் சமீபகாலமாக ரேஷன் அரிசி பல்வேறு குழுக்கள் மூலமாக பெறப்பட்டு, மொத்தமாக கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்காக ரயில்கள் மூலமும் கொண்டு செல்லப்படுகிறதாம்.. பல ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே போலீசார், இந்த கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
குண்டர் சட்டத்தில் கைது
முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்ய முடியாவிட்டாலும், புரோக்கர்கள் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் சிலரிடமிருந்து அரிசி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வெளி மாநிலங்களில் 15 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.. அதனால்தான், இவர்களை போலீசார் கண்டறிந்து, அரிசியையும் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியிலும் ரேஷன் அரிசி கடத்தல் நடந்துள்ளது.. கர்நாடகாவுக்கு 70 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிரமான சோதனையில் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வாகங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை வெளியிட்ட புகார் எண்கள்
ரேசன் அரசி பொருட்கள் கடத்தல் தெரிந்தால், உடனடியாக 18005995950 என்ற எண்ணிலும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல்துறை ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது...
அனைத்து கார்டுதாரர்களுக்குமே ரேஷன் பொருட்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இந்த கைது நடவடிக்கைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது..












Click it and Unblock the Notifications