சாதி வெறியில் கொடூர கொலையான கோகுல்ராஜ் உடல் அடக்கம்: அடங்குமா ரத்த வெறி?
சேலம்: சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்ட கோகுல்ராஜின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதன் மூலம் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சேலம் பொறியியல் கால்லூரியில் படித்து வந்த தலித் இளைஞனான கோகுல்ராஜ் சாதிமாறி காதலித்த குற்றத்திற்காக தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. இதில் கொடுமையான விஷயம், இது கொலையல்ல தற்கொலைதான் என்று இதனை மூடி மறைக்க பார்த்தது தான்.
தர்மபுரி இளவரசன் மர்ம மரணம் போலவே கோகுல்ராஜ் மரணமும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. கொல்லப்பட்ட மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சிலரால் கடத்திச்சென்று கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் இதையே உறுதிபடுத்தவே விசாரணையை தீவிரப்படுத்தியது போலீஸ்.

கொலைக்குக் காரணம்
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் கோகுல்ராஜ் தலித் சமூகத்தைச் சார்ந்தவர், சுவாதி கொங்கு வேளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள மலைக்கோவிலுக்குச் சென்று திரும்பும் போது மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் தலைவர் யுவராஜ் தலைமையில் வந்த சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலை இல்லாத கோகுல்ராஜின் உடல்
தலை இல்லாத கோகுல்ராஜின் உடல் ஈரோடு கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோகுல்ராஜை கடத்திச் சென்றது கோவில் சி.சி.டீவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளனர். மேலும் சுவாதி கொடுத்த புகாரில் கோகுல்ராஜை கடத்திச் சென்றவர்களின் காரில் தீரன் சின்னமலைப் பேரவை என்று எழுதி இருந்ததையும், எங்க சாதி பொண்ணை காதலிப்பியா என்று மிரட்டி கோகுல்ராஜை அவர்கள் கூட்டிச் சென்றதையும் கூறியுள்ளார்.

கொலை வழக்குப் பதிவு
இதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் தலைவர் யுவராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரஞ்சித், சந்திரசேகரன், ஸ்ரீதர், ஜோதி, அருண், சிவக்குமார் ஆகிய 9 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதில் யுவராஜ், அருண், சிவகுமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோதி என்ற மாணவியும், ஸ்ரீதரும் கோகுல்ராஜ் காதலித்த சுவாதியின் உறவினர்களாம்

கொலை செய்த யுவராஜ்
திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காதல் ஜோடிகள் சுற்றி திரிந்தால், அவர்களின் சமூகம் குறித்து யுவராஜ் விசாரிப்பதும், அதில் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி மாறி காதலித்தால், அவர்களை எச்சரித்து மிரட்டுவார் என்று கைதானவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். கடந்த 23ம் தேதி கோயிலுக்கு சுவாதியுடன் சென்ற கோகுல்ராஜிடம், சமூகம் குறித்து விசாரித்த பின்னரே யுவராஜ் கும்பல், சுவாதியை திட்டி அனுப்பிவிட்டு, கோகுல்ராஜை மட்டும் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குரல் கொடுக்காதது ஏன்?
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்த நிலையில், உறவினர்கள் தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு, உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். அசம்பாவிதங்களைத் தடுக்க, சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தர்மபுரியில் வன்னியர்- தலித் சமூகங்களைச் சேர்ந்த திவ்யா- இளவரசன் காதலித்ததால் இளவரசன் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அந்தப் பிரச்சினையில் தீவிரமாக குரல் கொடுத்த பல அமைப்புகளும் சில ஊடகங்களும் ஏனோ இந்த பிரச்சினை பற்றி இதுவரை பெரிதாக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு
கோகுல்ராஜின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் போராட்டமே இதை கொலை வழக்காக பதிவு செய்ய வைத்தது. காதல் பிரச்சினையில் யாராவது கொலை செய்யப்படும் போது அதற்காகப் போராட முன்வரும் அமைப்பை வைத்துதான் இறந்து போனவர் என்ன சாதி என்று தெரிந்துகொள்ள வேண்டிய வெட்கக்கேடான நிலையிலேயே நாம் இன்னும் உள்ளோம்.

திருமாவளவன் அஞ்சலி
கோகுல்ராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் அமைப் பின் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத் துவமனையில் திரண்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இருந்து 500 போலீஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உடல் அடக்கம்
சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கோகுல்ராஜ் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். வழியில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க ஊர்வலத்தின் முன்பும், பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவரது வீட்டின் முன்பு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் கோகுல்ராஜ் உடல் ஓமலூர் பெரமெச்சூர் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காதலித்தாலே கொலையா?
வட இந்தியாவைப் போலவே தமிழகத்திலும் சாதிமாறி காதலித்தால் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதை கெளரவக் கொலை என்று சொல்லி கெளரவம் என்ற வார்த்தையே கொச்சைப்படுத்தப்பட்டு வருவது தனிக்கதை. இது மாதிரி (கெளரவ!) கொலை செய்யப்படுகின்ற பெண்களில் 98 சதவிகிதம் பெண்கள் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள். கொலை செய்யப்படுகின்ற ஆண்களில் 95 சதவிகிதம் பேர் தலித் இளைஞர்கள்தான் என்ற அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரத்தை கூறியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.

கொடூர கொலைகள்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 தலித் இளைஞர்கள் சாதிமாறி காதலித்த குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தலை துண்டிக்கப்பட்டும், ஆணுறுப்பு வெட்டப்பட்டும் கொடூரமாக ஒரே மாதிரியாகவே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறார் கதிர்.

அடங்குமா சாதிவெறி
கோகுல்ராஜின் கொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கோகுல்ராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தருமபுரி இளவரசனும், ஓமலூர் கோகுல்ராஜூம் சாதி மாறி காதலித்த ஒரே காரணத்துக்காக கொடூரமான முறையில் உயிரை விட்டவர்களின் வரிசையில் இணைந்து விட்டனர். இந்தக் கொலையாளிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் அரசு நடுநிலைமையோடு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications