அரசு விடுமுறை நாட்கள்.. "இவங்களுக்கு" பொருந்தாது.. ஊழியர்களுக்கு வந்த அறிவிப்பு.. தடதட தூத்துக்குடி
தூத்துக்குடி: அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தூத்துக்கு மாவட்ட கலெக்டர் முக்கிய உத்தரவு ஒன்றினை ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளார்.
தற்போது வரவுள்ள அரசு விடுமுறை தினங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையினால், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதுவரை வரலாறு காணாத மழையில் தூத்துக்குடியும் வசமாக சிக்கிவிட்டது.. இதனால், தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன.. சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால்தான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
மீட்பு பணிகள்: பிறகு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
எனினும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகள் என அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து சேதத்தை உண்டுபண்ணியதால், நிவாரண பணிகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டுள்ளன.. இதன்காரணமாக, மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
வெள்ளநீர்: எனினும், நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரவுள்ள அரசு விடுமுறை தினங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று மாவட்ட கலெக்டர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது.. மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடப்பதால் அதில் அரசு ஊழியர்களின் பணி அத்தியாவசியமானது. எனவே அவர்களுக்கு தற்போது வரும் அரசு விடுமுறை நாட்கள் பொருந்தாது" என்று தெரிவித்துள்ளார்.
டிரான்ஸ்பர்: இதனிடையே, ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாகவும், விரைந்தும் செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி, அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்.. அவருக்குப் பதிலாக கோபாலகிருஷ்ணனை ஏரல் தாலுகா தாசில்தாராக நியமனம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications