“துணைவேந்தர்களை நள்ளிரவில் வீட்டுக்கு சென்று மிரட்டி உள்ளனர்..” ஆளுநர் ரவி பகிரங்க குற்றச்சாட்டு!
ஊட்டி: "துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உதகைக்கு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர். அதனால்தான் பலர் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்" என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டியில் இன்று முதல் 2 நாட்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று காலை மாநாடு தொடங்கிய நிலையில் சொற்ப துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். பலர் மாநாட்டை புறக்கணித்து உள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதில், 'தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது.
ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவித்திருந்தது.
ஊட்டியில் துணைவேந்தர் மாநாடு
இப்படியான சூழலில், தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் மாநாடு இன்றும், நாளையும்என இரு நாட்கள் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். தமிழக ஆளுநருர் ஆர்.என். ரவி மாநாட்டுக்கு தலைமை தாங்கி உள்ளார்.
இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படது. ஆளுநர் நடத்தும் இந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
இந்நிலையில், ஆளுநர் நடத்தி வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரும் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளனர்.
திரும்பிச் சென்ற துணைவேந்தர்
41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். அந்த 9 பேரும் மத்திய அரசு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகைக்குச் சென்ற நிலையில் தனது முடிவை மாற்றி துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ரவி குற்றச்சாட்டு
இதனையடுத்து இன்று துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஆளுநர் ரவி பேசுகையில், "துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உதகைக்கு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர். அதனால்தான் உதகைக்கு வந்தும் பலர் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்.
மாநாடு நடத்துவது பிடிக்கவில்லை
கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications