ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளின் தொகுப்பே ஆளுநர் உரை: விஜயகாந்த்
சென்னை: தமிழக முதல்வர் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளின் தொகுப்புதான் ஆளுநரின் உரை என்றும், அதில் புதிய கொள்கை, திட்டங்கள் இல்லை என்றும் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்றப ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். ஆளுநரின் உரை பற்றி கருத்து தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ''முதல்வர் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளின் தொகுப்பாக தான் உள்ளது ஆளுநரின் உரை என்று கூறியுள்ளார்.
வரும் ஆண்டில் என்ணென்ன திட்டங்களை செய்யப்போகிறது என்றவிவரம் அவரது உரையில் இல்லை. அதேபோல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புதிய கொள்கை, திட்டங்கள் இல்லை.

மேலும், மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வழிவகை சொல்லப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
இலவச விளம்பரம்-ராமதாஸ்
இதேபோல ஆளுநர் அறிக்கை பற்றி கருத்து கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், அரசின் புகழ்பாடும் அறிக்கையாக நடப்பாண்டின் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு என்ற அளவை விட குறைந்து விட்டது. இதை சரி செய்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.
தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு அரசின் தவறான கொள்கைகளும், விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்காததும் தான் காரணமாகும். இந்தக் குறைகளை சரி செய்து விவசாயத்திற்கு புத்துயிரூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, வேளாண் உற்பத்தித் திறனை பெருக்க இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற வெற்று வசனத்தை மட்டும் ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்திருக்கிறது.
தமிழகத்தை வாட்டி வதைக்கும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சரி செய்வதற்கான எந்த திட்டமும் ஆளுநர் உரையில் இடம் பெறாதது அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மட்டும் கர்நாடகத்தில் ரூ.12,000க்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், தொழில்துறையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, எதார்த்தத்தில் இருந்து ஆளுநர் உரை எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications