தொலைபேசி ஒட்டு கேட்பு-அமைச்சர்கள் அறைக்கு மாறிய சகாயம்- திடீரென காலிசெய்ய சொன்ன அதிகாரிகள்!!
சென்னை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ள சட்ட ஆணையர் சகாயம் தங்கியிருந்த அறையில், ஒட்டுக் கேட்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமைச்சர்கள் தங்கும் அறைக்கு தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார் சகாயம். கிரானைட் முறைகேடு குறித்து தொலைபேசி மூலமும் புகார் அளிக்கலாம் எனவும் சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை பகுதிகளில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 3ஆம் தேதி தனது விசாரணையை தொடங்கினார். இதையடுத்து நேற்று முதல் பொதுமக்களிடம் புகார் மனுவையும் பெற்று வருகிறார்.இந்நிலையில், வியாழக்கிழமையன்று அவரிடம் 71 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஒட்டுக்கேட்கும் கருவிகள்
சகாயம் உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கி தங்களின் பணிகளை மேற்கொண்டு வந்தனர். வியாழக்கிழமை நள்ளிரவில் சகாயத்தின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ் தகவலில், தங்கும் அறையில் மைக் பொருத்தி ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. இதையடுத்து, தனது உதவியாளரை வைத்து அறை முழுவதும் சகாயம் சோதனை மேற்கொண்டார்.
வேறு அறைக்கு மாற்றம்
அருகில் தங்கியிருந்த மூத்த அறிவியல் அலுவலர்கள் அறைகளில் சோதனை செய்தபோது பீப்...பீப்... சத்தம் ஒலித்தது. இதுகுறித்து அவர்கள் சகாயத்திடம் தெரிவித்தனர்.பின் சகாயம் அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தார். அதையடுத்து கீழ்தளத்திலுள்ள 11ஆம் எண் அறை ஒதுக்கப்பட்டதையடுத்து சகாயம் அங்கு தங்கினார். அறிவியல் அலுவலர்களுக்கு புதிய கட்டடத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டன.
அமைச்சரின் அறையில்
கீழ்தளத்தில் சகாயம் தங்கியது, அமைச்சர்கள் தங்கும் அறை. அமைச்சர்கள் வரலாம் என்ற தகவலால், நேற்று காலை அந்த அறையை காலி செய்து வேறு ஒரு அறைக்கு செல்லும்படி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஒருவர், சகாயத்தின் உதவியாளரிடம் தெரிவித்தார். பின் பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவரும் அவரிடம் பேசியுள்ளார். ஆனால் சகாயம், அறையை காலி செய்ய மறுத்தார்.
லாட்ஜில் தங்குவேன்
தொடர்ந்து வற்புறுத்தினால் லாட்ஜில் சென்று தங்குவதை தவிர வேறுவழியில்லை என சகாயம் தெரிவித்தார். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் சகாயத்துடன் பேசினர். அமைச்சர் வேறு அறையில் தங்குவதால் சகாயத்தை வேறு அறைக்கு மாற்ற வேண்டாம் என அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவே கீழ் தளத்திலேயே சகாயம் தங்கிக்கொண்டார். சுற்றுலா மாளிகையில் உணவு கூட அருந்தாமல் வெளியில் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டு விட்டு பொதுமக்களை சந்திக்க புறப்பட்டார் சகாயம்.
மனுக்கள் அளித்த பொதுமக்கள்
பின்னர், நேற்று காலை பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திலும் முழுமையாக சோதனை செய்த பின்னரே சகாயம் விசாரணையைத் தொடங்கினார். நேற்று பகல் 11 மணியில் இருந்து மனுக்களை பெறத் தொடங்கினார் சகாயம் 38 மனுக்கள் அளிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணை நிறைவு
மதுரையில் 3 நாட்கள் விசாரணை நடந்தது. பொதுமக்களிடம் 109 மனுக்களை சகாயம் குழு பெற்றுள்ளது. இதில் பெரும்பாலும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள், அப்பாவி நில உரிமையாளர்களை மிரட்டி நிலத்தைக் கைப்பற்றி, அதிலிருந்து கற்களை வெட்டி எடுத்தது தெரிய வந்துள்ளது. முதல்கட்ட விசாரணையை முடித்த சகாயம் குழு நேற்று சென்னை திரும்பினர். வரும் புதன்கிழமை மீண்டும் மதுரை திரும்பும் இக்குழு, 2வது கட்ட விசாரணையைத் துவக்குகிறது என்றார்.
தொலைபேசியில் புகார்.
இந்நிலையில், கிரானைட் முறைகேட்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து 044 24454054 / 34 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சகாயம் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டோரா அறிவிப்பு
மேலும், சகாயம் குழுவிடம் மனு அளிக்கலாம் என ஊராட்சி அலுவலகங்களில் அறிவிக்கை வெளியிடவும், மனு அளிப்பது குறித்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர் பணிநீக்கம்
இதனிடையே சர்க்யூட் ஹவுசில்தற்காலிக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் ஒருவர் தான் சகாயத்திற்கு கீழ்தளத்திலுள்ள அறையை ஒதுக்கியுள்ளார். இப்பிரச்னையையடுத்து அந்த ஊழியரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்து விட்டனர்.
8 பேரை அனுப்பிய சகாயம்
கிரானைட் விசாரணை குழுவில் இருந்த கனிமவள உதவி இயக்குநர்கள் உள்பட 8 பேரை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திடீரென்று நீக்கி அரசுப் பணிக்கு திருப்பி அனுப்பினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக தற்போது ஆய்வு செய்கிறேன். என்னிடம் போதுமான பணியாளர்கள் உள்ளனர். இதுபோக அரசு சார்பில் 11 பேர் எனது பணிக்கு கொடுத்தனர். அது தற்போது தேவையில்லை. இதனால் இந்த பட்டியலில் உள்ள 2 உதவியாளர்கள் ஒரு அலுவலக உதவியாளர் என மூன்று பேரை மட்டும் பணிக்கு வைத்து விட்டு மீதியுள்ள கனிமவளத்துறையைச் சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டேன், என்றார். குழுவில் இருந்து நீக்கம் செய்ததிற்கான உத்தரவை 8 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் நேற்றிரவு பணி முடித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications