மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - தாமிரபரணி ஆறு, குற்றால அருவிகளில் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை நீடிப்பதால் தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. குற்றாலநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது.

தென்காசி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டோடியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மெயினருவியில் கொட்டிய வெள்ள நீர் அருகில் உள்ள குற்றால நாதர் கோவிலுக்குள் புகுந்தது. கொரோனா தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் அனுமதியில்லை என்பதால் 24மணி நேரம் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக தென்காசி மாவட்டம் கடனாநதி அணையும், கடையம் ரமாநதி அணையும் நிரம்பி வழிகிறது.

திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அடவி நயனார் அணையும் நிரம்பி வருகிறது. தொடர்மழை காரணமாக அணைகளும் குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications