இன்று முதல் ஹெல்மெட் மட்டும் இல்லை.. பைக்கில் இதையும் செக் பண்ணிக்கோங்க.. கோவை போலீஸ் தீவிர தணிக்கை
கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் இன்று முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர்
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், விபத்துக்களை குறைக்கவும் விபத்துக்களினால் எற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கவும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைக்கு ஏற்ப 'யு டர்ன்' அல்லது 'ரவுண்டானா' திட்டத்தை கோவையில் போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல், இரு சக்கர வாகன விபத்துக்களில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு என ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது. இதையடுத்து ஹெல்மட் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகரில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும் கோவை மாநகர போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வந்தால் மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பைக்கில் பொருத்தியிருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். விதிகளை மீறி இருசக்கர வாகன ஓட்டிகளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இன்று முதல் கோவையில் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சொற்ப எண்ணிக்கையில் தான் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
இன்று ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, இனிமேல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாமல் செல்லும் போதுதான் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. எனவே விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாகன ஓட்டிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் அபராதம் விதிக்கப்படும். ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications