செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: பதிவேட்டை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரையிலான காலத்தில் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த பதிவேட்டை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இதன் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர் நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரி தொழிலதிபர் ராஜீவ் ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, தொடக்கத்திலிருந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெள்ள பாதிப்பின்போதும், வெள்ளம் ஏற்பட்ட பிறகும் எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு பதில் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்..
மேலும், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரையிலான நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த பதிவேட்டையும் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications