இருந்ததும் போச்சு.. தென்காசியில் அதிமுகவை அதிர வைத்த நம்பர் 3.. காங்கிரஸ் வேட்பாளர் வென்றது எப்படி?
தென்காசி: தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த முறையை விட 3 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார் பழனி நாடார். அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தோல்வி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தென்காசி ஆர்டிஓ லாவண்யா ஊடகங்களுக்கு கூறுகையில், இந்திய காங்கிரஸ் வேட்பாளருக்கு கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் 3 தபால் வாக்குகள் கிடைத்ததன் மூலம் வெற்றி வித்தியாசம் 370ல் இருந்து 373 ஆக அதிகரித்துள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில், பழனி நாடார் 89,315 வாக்குகள் பெற்று 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 88,945 வாக்குகளைப் பெற்றார். இந்த தொல்வயில் நம்பிக்கை இல்லாமல் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடுத்தார்.
முக்கியமாக தேர்தல் முடிவுகள் மாறுவதற்கு காரணமாக இருந்த 28 முதல் 30 சுற்றுகளாக ஈவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணும் உத்தரவை பிறப்பித்தார். 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், அந்தத் தொகுதிக்கான அஞ்சல் வாக்குகள் 2,971 ஆக இருந்தன, அதில் 2,576 வாக்குகள் 2021 எண்ணும் போது செல்லுபடியாகும் எனக் கருதப்பட்டது.
ஆனால் படிவம் 13சியில் கையொப்பம் இல்லாததால் 2021ல் எண்ணப்படாத 82 தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டதாக ஆர்டிஓ தெரிவித்தார். இந்த வாக்குகளும் சேர்த்து இந்த முறை எண்ணப்பட்டது.
இந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. நேற்று தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு மறு எண்ணும் பணி துவங்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் ஓட்டுகள் கொண்டு வரப்பட்டன. இடை இடையே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
பழனி நாடார், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் உட்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தபால் ஓட்டும் முறையாக வேட்பாளர் பிரதிநிதிகளிடம் காட்டப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. முன்பு எண்ணப்படாத 82 தபால் வாக்குகள் இந்த முறை எண்ணப்பட்ட போது 36 வாக்குகளை பழனி நாடார் பெற்றார்.
செல்வா மோகன்தாஸ் பாண்டியன் 31 வாக்குகளை பெற்றார். மொத்தமாக மறு எண்ணிக்கையில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் மட்டும் பழனி நாடார் 1,642 வாக்குகளும், பாண்டியன் 704 வாக்குகளும் பெற்றனர். மொத்தமாக பெறப்பட்ட வாக்குகள் அடிப்படியில் பழனி நாடார் 89,318 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். செல்வா மோகன்தாஸ் பாண்டியன் 88,945 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications