ஜான் பாண்டியன் புட்டு புட்டு வச்சிட்டாரே.. "போன வாரம்கூட பார்த்தீங்க இல்ல"..கோட்டை வரை பறந்த மேட்டர்
சென்னை: தமிழ்நாட்டில் கலவரமே நடக்கவில்லை என்று முதல்வர் சொல்கிறாரே, போன வாரம்கூட பரமக்குடியில் என்ன நடந்தது பார்த்தீங்களா? சாதி கலவரத்தை தடுக்க முதல்வரின் கண்காணிப்பு இங்கு ரொம்ப அவசியம்'' என்று ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேங்கை வயல் விவகாரம் வெடித்தபோது, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
"சமூகநீதிக்கான ஆட்சிதான் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, வேங்கைவயல் மக்களுக்கான சமூகநீதியை எப்போது பெற்றுதர போகிறீர்கள்? மக்கள் படிப்பறிவிலும் மற்ற நாகரீகத்திலும் முன்னேறுகின்ற இந்த காலத்தில் கூட இப்படி ஒரு மனிதத்தன்மையற்ற செயலை செய்தது வேதனை அளிக்கிறது.. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களிடமே கொடுத்திருந்தால் குற்றவாளியை பிடித்திருப்பார்களே" என்று காட்டமாக கூறியிருந்தார்.

விடியல் அரசு: அதுமட்டுமல்ல, "விடியல் அரசு இந்த பிரச்சனைக்கு பிறகாவது அந்த மக்களுக்கு பொது குடிநீர் தொட்டியிலிருந்து இணைப்பு கொடுத்திருக்க வேண்டும் . மாறாக மீண்டும் தனி குடிநீர் தொட்டி கட்டியிருக்கிறீர்கள் . இது தான் விடியல் அரசின் சமூக நீதியா? விரைவில் வேங்கை வயல் கிராம மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்றும் ஜான் பாண்டியன் திமுக அரசை அழுத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க, ஜான் பாண்டியன் மதுரை வந்திருந்தார்.. அப்போது ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது சொன்னதாவது: ''வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் அதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாட்டார்கள் என்று நான் சொல்லியிருந்தேன். 2 பக்கத்திலும் இருந்து, அவர்களுக்கு வாக்குவேண்டும்... யார் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது, போலீசாருக்கும் அரசுக்கும் தெரிந்தாலும், அவர்களை கைது செய்யாமல் இருக்கும் நோக்கம் வாக்குகள் பெற முடியாமல் போய்விடுமோ என்பது தான்.

ஜான் பாண்டியன்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நீண்ட ஆண்டுகளான கோரிக்கை, விகிதாச்சார அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பட்டியல் இனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கை. பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியே செல்லவேண்டும் என்று, மக்கள் விரும்புவதால் அதையே வலியுறுத்தி நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். இப்போதுகூட மதுரையில் கூட்டம் நடத்துகிறோம்.
அதிமுக விரிசல் விவகாரத்தில் தேர்தல் ஆணையமே எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என்று சொல்லிவிட்டது... இதற்கு மேல் பேச வேண்டியது ஒன்னுமில்லை.. தொண்டர்களின் குழப்பத்திற்கு அது காரணமாக இருக்காது... எடப்பாடி பழனிசாமிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கப்போகிறது.

திமுக அரசு: தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மிகவும் தவறானது. 8 மணி நேரம் வேலை செய்வதற்கே சிரமப்படுகின்றனர். 12 மணி நேரம் வேலை செய்தால் ஒரு நாள் கூடுதல் விடுப்பு என்பது நல்ல முன்னுதாரணம் கிடையாது.. திமுக ஆட்சியில் சாதிய மோதல் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. ஆனாலும், ஒரு வாரத்துக்கு முன்பு கூட பரமக்குடியில் சாதிக் கலவரம் நடந்தது.. கல்லூரி விழா ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை ஆசிரியரும், மாணவரும் துன்புறுத்தியது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
கடலாடி பள்ளியில் ஆசிரியர் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது... ஆனால் காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாதிய கலவரங்களை தடுக்க முடியும்... சாதி கலவரத்தை தடுக்க முதல்வரின் கண்காணிப்பு இங்கு ரொம்ப அவசியம் தேவை'' என்றார் ஜான்பாண்டியன்.












Click it and Unblock the Notifications