சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு: தூசு தட்டும் சிபிஐ..... அச்சத்தில் திமுக !
சென்னை: சொகுசு கார் இறக்குமதி தொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் சிபிஐ மீண்டும் வேகம் காட்டி வருகிறது. இதனால் திமுக பிரமுகர்கள் திகிலில் உறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததில் அலெக்ஸ் ஜோசப் என்பவருக்கு தொடர்பு இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி உள்பட பல பிரமுகர்களுக்கு அலெக்ஸ் ஜோசப் வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார்கள் வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் அலெக்ஸ் ஜோசப் கடந்த 2011-ஆம் ஆண்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் மீது சொகுசு கார் கடத்தல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

18 இடங்களில் ரெய்டு
இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ச் ரோவர், பி.எம்.டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஹம்மர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 33 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் எச்சரிக்கை
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுதினமே, இந்த கார் இறக்குமதி தொடர்பாக மு.க. ஸ்டாலினின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இந்த சோதனை நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலரே இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழிவாங்கும் நடவடிக்கை
கூட்டணியிலிருந்து விலகியதற்காக தி.மு.க. வை பழிவாங்குவதற்காக காங்கிரஸ் சி.பி.ஐ.-யை ஏவிவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

அலெக்ஸ் ஜோசப் கைது.
இதனிடையே கடந்த 11 மாதங்களாக தலைமறைவாக இருந்த அலெக்ஸ் ஜோசப்பை பிப்ரவரி 1-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர்.

சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னையில் உள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு இறக்குமதி வரியின்றி அவர் வாங்கிக் கொடுத்துள்ளதால், சென்னை சிபிஐ சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வணங்காமுடி முன்பு, பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் அலெக்ஸ் ஜோசப் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிபிஐ காவலில் விசாரணை
இதையடுத்து அலெக்ஸ் ஜோசப்பை மூன்று நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரிடம் யார்-யாருக்கு சொகுசு கார்களை வரி ஏய்ப்பு செய்து விற்கப்பட்டது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் அலெக்ஸ் ஜோசப்பின் முறைகேட்டுக்கு சாதகமாக நடந்துகொண்டு ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார் எனவும் சி.பி. ஐ. விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தத்தை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தது. இதையடுத்து வழக்கு தொடர்பாக இன்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுகவின் அச்சம்
இந்த வழக்கில் சி.பி.ஜ காட்டும் வேகம் தி.மு.க. தரப்பை அச்சப்பட வைத்துள்ளது. காரணம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கை சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் அரசு வேகப்படுத்துவது, தி.மு.க. சாத்திய கூட்டணி கதவை உடைத்து திறக்கும் முயற்சி என்றே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications