ஆசையாய் கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்ற காதல் மனைவி.. கத்தியால் குத்திய கணவர்.. பெண்ணை தேடும் போலீஸ்
செங்குன்றம்: தனது காதல் மனைவியை ஆந்திராவில் உள்ள கோனே ஃபால்ஸில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி வந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பல்கீஸ். இவர்களது மகள் தமிழ்ச் செல்வி (19). செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர மதன் (22). தமிழ்ச் செல்வியும் மதனும் காதலித்து வந்தனர்.
கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் தனது மகள் தமிழ்ச்செல்வியை காணவில்லை என அவரது பெற்றோர் செங்குன்றம் போலீஸில் புகார் அளித்தனர்.

தமிழ்ச் செல்வி
இந்த புகாரின் பேரில் தமிழ்ச் செல்வியின் கணவர் மதனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மதன், கடந்த மாதம் 25 ஆம் தேதி தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கோனே அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார் மதன்.

மனைவிக்கு என்னாச்சு
இதையடுத்து அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு மதன் மட்டும் வீட்டுக்கு வந்துவிட்டார். மனைவிக்கு என்னாச்சு என தெரியவில்லை என்று மதன் தனது வாக்குமூலத்தில் கொடுத்தார். இதையடுத்து மதனை அழைத்துக் கொண்டு அவர் சொன்ன கோனே நீர்வீழ்ச்சிக்கு போலீஸார் சென்றனர். அங்கு தமிழ்ச் செல்வியை குத்தியதாக சொல்லப்பட்ட இடத்தை போலீஸார் பார்வையிட்டனர்.

போலீஸார் தேடல்
அப்போது அந்த பெண் அங்கு இல்லை. அந்த பகுதி முழுவதும் தமிழ்ச் செல்வியை போலீஸார் தேடிபார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆந்திர போலீஸார் உதவியுடன் கீழே அடிவாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நீர் வீழ்ச்சிக்கு மதனும் தமிழ்ச் செல்வியும் ஒன்றாக செல்வதும் வரும் போது மதன் மட்டும் வருவதும் தெரியவந்தது.

3 நாட்களாக தேடி
கடந்த 3 நாட்களாக தேடியும் அந்த பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த பெண் எப்போது அவரது தாயுடன் பேசினாலும் மதன் திட்டுவார் என்றும் காணாமல் போனதற்கு முதல் நாள் தனது மகளுடன் பேசிக்கொண்டிருந்த போது மதன் அந்த செல்போனை பிடுங்கி தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் தமிழ்ச் செல்வியின் தாய் தெரிவித்துள்ளார். தனது மகளின் நிலை தெரியாமல் பெற்றோர் தவியாய் தவித்து வருகிறார்கள். மகளை யாரேனும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனரா இல்லை மதன் குத்தியதில் நிலைகுலைந்து உயரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications