தற்போது நான் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை: பாஜகவுக்கு ஷாக் தந்த விஜயகாந்த்
சென்னை: தற்போது நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வோடு கூட்டணி அமைத்தது தேமுதிக. ஆனால், அதனைத் தொடர்ந்து நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக களமிறங்கியது. ஆனால், கடைசி வரை அக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு என்றோ, அல்லது இல்லையென்றோ கூறாமல் மவுனச் சாமியாராக வலம் வந்தார் விஜயகாந்த்.
இதனால், பாஜக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது கூட்டணிக் கட்சியான தேமுதிக-வை ஆலோசித்து, அங்கு போட்டியில்லை என அறிவித்தது பாஜக.
அப்போது தமிழிசை - விஜயகாந்த சந்திப்பு மூலம் பாஜக கூட்டணியில் தொடர்ந்து தேமுதிக இருப்பது உறுதியானது. இதற்கிடையே தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என தேமுதிக நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்பட்டது. இதனாலேயே இரண்டு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இது தொடர்பாக வெளிப்படையாக கருத்துக் கூறாமல், இரண்டு கட்சிகளும் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தன.
இந்நிலையில், தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அப்போது அவர்களை நேரில் சந்தித்தார் விஜயகாந்த். உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு போர்வை வழங்கிய விஜயகாந்த், அவர்களது போராட்டத்திற்கு தனது ஆதரவினைத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் அணி...
மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அணி எங்கள் கட்சியில் மட்டும்தான் உள்ளது. அதனால் அவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் பார்க்க வந்தேன்.

அரசியலுக்கு சம்பந்தமில்லை...
போலீஸ் உதவி கமிஷனர் மாற்றுத்திறனாளியை தாக்கியதாக புகார் கூறுகிறார்கள். அவர்களை அடிக்க கூடாது. அவர்களை அடிக்க என்ன உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால் தான் நான் வந்தேன்.

புள்ளிவிபரம் தர மறுக்கிறது...
தமிழகத்தில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளது. கடைகள் பற்றிய உண்மையான புள்ளி விபரங்களை அரசு கொடுக்க மறுக்கிறது. தவறான புள்ளி விபரங்களை கொடுத்து கோர்ட்டையும் நாட்டையும் ஏமாற்றுகிறார்கள்.

கூட்டணியில் இல்லை...
மதுவிலக்கு போராட்ட பிரச்சினையில் ஒன்று சேர்ந்து போராடினால் அந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகிறீர்கள். எல்லோரும் சேர்ந்து போராடினால் நானும் போராட தயார். தற்போது நான் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி
தற்போது யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளதன் மூலம் விஜயகாந்த் சில விஷயங்களை அரசியல் கட்சிகளுக்கு சூசகமாக உணர்த்தியுள்ளதாக தெரிகிறது. கேப்டனின் அரசியல் மூவ்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications