ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்.. பிறந்த நாள் விழாவில் வைகோ உறுதி!
ஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன் என பிறந்த நாள் விழாவில் வைகோ தெரிவத்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன் என பிறந்த நாள் விழாவில் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேப்பேரி பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

வைகோ பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பா.விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கண்ணிமைப்போல் பாதுகாப்பேன்
அப்போது பேசிய வைகோ, திமுக இளைஞரணி மதுரையில் தொடங்கப்பட்ட போது தான் ஸ்டாலினுடன் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், ஸ்டானின் பேச்சை அன்றில் இருந்தே தான் ரசிக்க ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்தார். 29 வருடங்களாக எப்படி கருணாநிதியை ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாத்தேனோ, அதேபோல ஸ்டாலினையும் கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்றும் வைகோ உணர்ச்சி பொங்க உறுதியளித்தார்.

நேர்மை எனும் கவசம்
திமுகவுடன் கரம்கோர்த்து உள்ளதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாமோ? என்று அனைவரும் யோசிக்கிறார்கள் என்ற அவர் தனக்கு எந்த பதவி ஆசையும், பண ஆசையும் எனக்கு இல்லை என்றார். என் நேர்மை உலகு அறிந்தது அவர், தான் அணிந்திருந்த கவசத்தை தர்மத்துக்காக கர்ணன் அவிழ்த்தான். ஆனால் எந்த சூழ்நிலையிலும், எதற்கும் என் நேர்மை எனும் கவசத்தை அவிழ்க்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

வேரோடு அழிக்க பார்க்கிறது
தி.மு.க.வை அழிக்க பா.ஜ.க. வஞ்சக திட்டம் தீட்டிவருவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். திராவிட இயக்கத்தை வேரோடு அழிக்க பார்க்கிறது என்றும் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வெகு தொலைவில் இல்லை
முழு பலத்தையும் திமுகவுக்கு கொடுத்து களத்தில் இறங்குவோம் என்றும் திராவிடத்தை வெல்ல எந்த முயற்சிக்கும், எந்த வித சக்திகளுக்கும் அனுமதி தர மாட்டோம் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் லட்சியங்கள் வெல்ல, தர்மம் நிலைக்க தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கப்போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications