அதிமுகவினர் போராட்டத்தால் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது: இல.கணேசன்

ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் கூறியதாவது:
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். இது வருத்தமளிக்கிறது. ஆனால் இந்த வழக்கு 18 ஆண்டுகளாக நடந்து தண்டனை கொடுக்கப்பட்டதால் தமிழக மக்களிடம் ஒரு அனுதாபம் இருந்தது.
அதேநேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் நடத்திய சில போராட்டங்களால் மக்களிடம் இருந்த அனுதாபம் போய் விட்டது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது அ.தி.மு.க. அரசு தான். தற்போது அ.தி.மு.க.வினர் செய்வதை போலீசார் கை கட்டி வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை தான் உருவாகும். அனுதாபம் உருவாகாது.
கர்நாடக அரசு இந்த சொத்து குவிப்பு வழக்கை நாங்கள் நடத்துகிறோம் என்று கேட்டு பெறவில்லை. இங்கிருந்து தான் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில அ.தி.மு.க.வினர், கர்நாடக மக்களை பற்றி பேசுவதையும், சுவரொட்டி மூலம் சித்தரித்து வருவதையும் பா.ஜனதா கண்டிக்கிறது. இந்த செயலில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இதுபோன்ற போராட்ட செயல்களில் ஈடுபட்டால் மக்களிடம் மதிப்பை இழப்பார்கள்.
இலங்கை பிரச்சினையில் பாஜக அரசு சரியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
பாஜக ஆட்சியில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 நாட்களில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
மீனவர் பிரச்சினை என்பது தொழில் ரீதியான பிரச்சினை ஆகும். இதனால் நாங்கள் மீனவர் பிரச்சினை குறித்து பேசி கொண்டு இருக்கிறோம். விரைவில் இதற்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்றும்இல.கணேசன் கூறினார்.












Click it and Unblock the Notifications