Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்த உதவிய இளங்கோவன்! கடுப்பில் எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடிப்போயிருந்த அதிமுகவை தமிழகத்தில் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளார் ஒரு மூத்த அரசியல் தலைவர். அவர் ஆளும் கட்சிக்காரர் கிடையாது, எதிர்க்கட்சியான காங்கிரஸ்காரர் என்பதுதான் இதில் சுவாரசியம்.

அதிமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளை கடந்துவிட்டது. எப்போதுமே 4 ஆண்டுகளை கடந்த ஆட்சி மீது மக்களுக்கு இயல்பாக ஒரு அதிருப்தி இருப்பது வழக்கம். அதேபோன்ற அதிருப்திக்கு அதிமுக ஆட்சி மட்டும் விதிவிலக்கு என்று கூறிவிட முடியாது.

திமுக மீது கோபம்

திமுக மீது கோபம்

கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலகட்டங்களில், இலங்கை பிரச்சினை, 2ஜி ஊழல், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு போன்றவை ஆட்சிக்கு எதிரான கோபத்தை மக்களிடம் உருவாக்கியிருந்தன. ஆனால், தற்போதுவரை தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் கோபம் என்ற ஒன்று எழாவிட்டாலும், இயல்பான அதிருப்தியை அது சம்பாதித்து வைத்திருந்தது.

அதிமுக மீது அதிருப்தி

அதிமுக மீது அதிருப்தி

குடிநீர் பிரச்சினை, கரும்பு விவசாயிகள் பிரச்சினை, மின்வெட்டு, முதல்வர் ஆக்டிவாக இல்லாதது, அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாவது, மதுவினால் ஏற்பட்ட பாதிப்புகள், கலாம் உடல் அடக்கத்திற்கு ஜெயலலிதா செல்லாதது போன்ற விவகாரங்கள் அரசுக்கு எதிராக பூதாகரமாக கிளம்பிக் கொண்டிருந்தன. இந்த அதிருப்தி போதாதது, ஆட்சிக்கு எதிராக மக்களிடம் கோபத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மதிமுக, திமுக போன்ற கட்சிகள் மதுவிலக்கை திடீரென பெரிதுபடுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்தின.

ஆளும் கட்சி அமைதி

ஆளும் கட்சி அமைதி

எதிர்க்கட்சிகளின் எந்த போராட்டங்களுக்கும் ஆளும் கட்சியில் இருந்து எந்த ஒரு சலனமும் வரவில்லை. இவர்களின் போராட்டத்தை காட்டிலும், ஆளும் கட்சி அமைதியாக இருப்பதுதான் மக்களுக்கு எரிச்சலை கூட்டிக்கொண்டிருந்தது. அதிமுகவினருக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஏன் தங்கள் தலைவி எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறார் என்ற மர்மத்தால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அதிமுக உற்சாகம்

அதிமுக உற்சாகம்

இந்நிலையில்தான், நெசவாளர் தின நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். நாட்டின் பிரதமரே, ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதையும், தொடர்ந்து, விருந்து உண்டதையும் அறிந்த அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தங்கள் கட்சியின் செல்வாக்கு இன்னும் உச்சத்தில் இருப்பதாக அவர்கள் நம்பினர்.

உற்சாகத்திற்கு உரம்

உற்சாகத்திற்கு உரம்

அதிமுகவினரின் இந்த உற்சாகத்திற்கு மேலும், உரம் போட்டவர்தான் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவு தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆம். உண்மையில், அவர் விமர்சனம் செய்யவில்லை, உறங்கி கிடந்த அதிமுகவினரின் உணர்ச்சிகளுக்கு உரம் போட்டு வளர்த்தெடுத்துவிட்டார்.

முதலில் சும்மா இருந்த அம்மா

முதலில் சும்மா இருந்த அம்மா

மூத்த தமிழக அரசியல் தலைவர்களே சும்மா இருக்கும்போதும், மோடி-ஜெயலலிதா சந்திப்பு குறித்து தனக்கே உரிய பாணியில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார் இளங்கோவன். முதலில், இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து, ஒன்றுமில்லாமல் இருக்கும் காங்கிரசை, உயர்த்திபிடிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கருதியுள்ளது.

சென்டிமென்ட் அட்டாக்

சென்டிமென்ட் அட்டாக்

ஆனால், தமிழக மக்கள், தாய்க்குலங்களை தப்பாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற சென்டிமென்ட்டை கையில் எடுத்து, அனுதாப அலையை பெறலாம் என்று ஆலோசகர்களில் ஒருவர் தலைமையின் காதில் போட்டாராம். அதன்பிறகுதான் கார்டனில் இருந்து கண் அசைவு வந்தது. பொங்கியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

3 நாள் கழித்து

3 நாள் கழித்து

14ம் தேதி இளங்கோவன் விமர்சனம் செய்ததற்கு 17ம் தேதிக்கு பிறகே, அதிமுகவினர் போராட்டங்களை நடத்தியது இந்த சென்டிமென்ட் ஐடியாவின் பின்னணியில்தான் என்று கிசுகிசுக்கிறார்கள் சென்னையின் மூத்த பத்திரிகையாளர்கள்.

சக்கர வியூகத்தில் இளங்கோவன்

சக்கர வியூகத்தில் இளங்கோவன்

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாராம் ஆண்டி என்ற கதையாகி விட்டது இளங்கோவனுக்கு. பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்துவிட்டது காங்கிரசுக்கு. ஏனெனில் இளங்கோவன் போட்ட கணக்கு வேறு. ஆனால், சக்கர வியூகத்திற்குள் சென்று சிக்கிக்கொண்ட அபிமன்யூ கதையாகிவிட்டது இளங்கோவன் நிலைமை.

வேண்டுமென்றே கருத்துகள்

வேண்டுமென்றே கருத்துகள்

இளங்கோவன் இதுபோன்ற தேவையற்ற கருத்தை கூறுவது ஆதாயமில்லாமல், நாட்டு பொதுச் சேவைக்காக என்று கூறினால் அதை சத்திமூர்த்தி பவன் வாட்சமேன் கூட நம்பமாட்டார். ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் முடங்கியிருந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவரானார் இளங்கோவன். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற பழைய கோஷத்தையே தூசிதட்டி முழங்கிக்கொண்டிருந்தால் காங்கிரசை யாரும் நம்பமாட்டார்கள் என்பதால், சர்ச்சைக்கருத்துகளையே கவன ஈர்ப்பு ஆயுதமாக மாற்றினார் இளங்கோவன்.

தொகுதி பேரம்

தொகுதி பேரம்

தமிழக அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு தெரிவித்தார். இதற்காக வழக்குகளை சந்தித்தார். ஆனால், ஆதாரப்பூர்வமாக எதையும் அவர் நிரூபிக்கவில்லை என்பது இதில் கவனிக்கதக்கது. அவரது நோக்கமெல்லாம், ஆளும் கட்சியை எதிர்த்து பேசும் 'தில்' தனக்கு மட்டுமே இருப்பதாக காட்டிக்கொண்டு காங்கிரஸ் பக்கம் மக்களை திரும்ப செய்வதும், இதை ஆதாயமாக கொண்டு திமுகவிடம் தொகுதி பேரம் பேசுவதுமாகவே இருந்தது.

கவனத்தை ஈர்க்கிறாராம்

கவனத்தை ஈர்க்கிறாராம்

வாசன் தலைமையில் தமாகா பிரிந்து போனபோது, உள்ளதும் போன கதையாய் மாறியது காங்கிரஸ் நிலைமை. எனவே வாசன் பக்கம் போன காங்கிரசார் கவனத்தை மூல காங்கிரசுக்கே திருப்புவதற்கும், சர்ச்சைக் கருத்துக்களை ஆயுதமாக்கினார் இளங்கோவன். இதன்மூலம் காங்கிரஸ் உயிர்ப்போடு இருக்கிறது என்று மக்கள் நம்பவும் ஒரு வாய்ப்பு அமைந்தது. இந்நிலையில்தான், நாலு தொண்டர்களை பார்த்த ஆர்வத்தில், கவனத்தை ஈர்க்கிறேன் பேர்வழி என்று '50 நிமிடங்களாக என்ன செய்தார்கள்' என்பது போல, கண்டதையும் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

அதிமுக மீது அனுதாபம்

அதிமுக மீது அனுதாபம்

இளங்கோவன் தனது பேச்சின்மூலம், அதிமுகவுக்கு அனுதாபம் கிடைக்கச் செய்துள்ளார். எதிர்க்கட்சியிலுள்ளோரும் கூட, வெளியே அதிமுக போராட்டத்தை எதிர்த்தாலும், தனிப்பட்ட முறையில், இளங்கோவன்பேசியதை தவறு என்றுதான் சொல்கிறார்கள் என்றால் அவர் எப்படி சிக்கியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இளங்கோவனுக்கு எதிரான அதிமுகவின் போராட்டம் அக்கட்சிக்கு ஒரு தேர்தல் பிரச்சாரமாக மாறிவிட்டது என்பதை நினைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வயிற்றில் புளி கரைந்துள்ளது. இளங்கோவனை மனதுக்குள் வசைபாட எதிர்க்கட்சியினர் தயங்கவில்லை.

அதிமுகவை ஆப் செய்யும் வழி

அதிமுகவை ஆப் செய்யும் வழி

அதிமுகவை ஆப் செய்ய இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. இளங்கோவன் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதிமுகவினர் ஓவராக போராட்டங்களில் ஈடுபட்டு அதனால் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தால்தான், எதிர்க்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் வாழ்வு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+