வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல்.. சூறாவளியும் வீசுமாம்.. வெயிலும் சுடுமாம்..மிரட்டும் வானிலை
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 8ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 10ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.7 முதல் 10ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 7ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா என்ற புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மே 7 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, மே 8 ஆம் தேதி அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் எனவும் அந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7 மற்றும் மே 9 ஆம் தேதி இடையில் உருவாகும் இந்த புயல் நாட்டின் கிழக்கு கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலானது மத்திய வங்காள விரிகுடாவை நோக்கி கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் போது, அது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. மே 9 ஆம் தேதி சூறாவளி புயல் உருவாகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்கா புயல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மே 8 முதல் 11ஆம் தேதி வரையிலான நாட்களில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாக சுற்றுலா மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 7 மற்றும் 8 ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பலத்த மழை பெய்யக்கூடும். இன்றைய தினம் கேரளாவின் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தெற்கு உள் கர்நாடகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications