மதுரை மாநகராட்சியில் நடந்த மல்லுக்கட்டு! திமுக மேயருக்கு எதிராக வரிந்துகட்டிய திமுக கவுன்சிலர்கள்!
மதுரை: மதுரை மாநகராட்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே வரிந்து கட்டிக் கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக இருக்கும் இந்திராணி பொன்வசந்த் என்பவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக அறியப்படுகிறார்.
இவர் மேயராக பொறுப்பேற்றது முதலே எதிர்தரப்பினர் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை கூட்டி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர்களில் ஒருவரான ஜெயராமனுக்கு தனி அறை ஒதுக்கவில்லை மற்றும் அவர் பதவிக்கான சலுகைகள் எதுவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் வழங்கவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர்கள், மேயர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினால் அதில் ஒரு லாஜிக் இருக்கும். ஆனால் ஆளுங்கட்சியின் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சியின் கவுன்சிலர்களை சண்டமாருதம் செய்வது தான் தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஸ்டைலாக உள்ளது.

பட்ஜெட் தாக்கல்
இதனிடையே மதுரை மாநகராட்சியில் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிரச்சனையை பேசிக்கொள்ளலாம் என சமாதானம் செய்த பிறகே திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் இடையேயான யுத்தம் மதுரையில் மட்டுமல்ல பல மாநகராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.

பல இடங்களிலும்
நெல்லையை பற்றி சொல்லவே தேவையில்லை அந்தளவுக்கு அங்கு பனிப்போர் பயங்கரமாக உள்ளது. மதுரை, நெல்லை, கடலூர், வேலூர், உள்ளிட்ட மாநகராட்சிகளில் மட்டுமே இது போன்ற யுத்தங்கள் தொடர் கதையாக உள்ளது. இது குறித்து கட்சித் தலைமை கவனத்தில் கொண்டு உடனடியாக மத்தியஸ்தம் செய்து வைத்தால் மட்டுமே தேவையற்ற சர்ச்சைகளையும் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும் சூழலையும் தவிர்க்க முடியும்.

தலைமையின் கவனம்
மதுரை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற அமளி துமளி குறித்த தகவல் நிச்சயம் கட்சித் தலைமையின் கவனத்திற்கு இந்நேரம் சென்றிருக்கும். இது குறித்த விசாரணையை அறிவாலயத்தின் சீனியர் நிர்வாகிகள் தொடங்குவர் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications