"அம்மா" மருந்தகத்தின் கல்லாவில் கை வைத்த கொள்ளையர்கள்!
மதுரை: மதுரையில் அம்மா மருந்தகத்தில் கல்லாவை உடைத்து ஐம்பதாயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பாக டாஸ்மாக், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் போன்றவைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இவை எதுவும் பாதுகாப்பில்லாமல் செயல்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அண்மைக்காலமாக டாஸ்மாக் கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. இதனால், அங்கு பணி புரியும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும் கடைகளுக்கு ஒரு பாதுகாவலர் நியமித்து கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்களும் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுகிறது.
மதுரை கே.கே.நகரில் செயல்படும் அம்மா மருந்தகத்தை காலையில் ஊழியர்கள் திறந்தபோது, கடையின் உள்ளே கல்லாவை உடைத்து ஐம்பதாயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.
இதனைக் கண்டு பதற்றமடைந்த ஊழியர்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அம்மா மருந்தகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications