ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: ஆகஸ்டு 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதும், சசிகலா நடராஜன் மீதும், வருமானவரித்துறை தொடர்ந்துள்ள வழக்கு, சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி முன்னிலையில், வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் ஆஜராகவில்லை. முதல்வர் ஜெயலலிதா சார்பிலும், சசிகலா நடராஜன் சார்பிலும் 2 மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமானவரித்துறையினரிடம், இந்த வழக்கு தொடர்பாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது, அந்த மனு வருமானவரித்துறையின் பரிசீலனையில் உள்ளது, வருமானவரித்துறை சார்பில் வரும் 28-ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும், என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
சசிகலா நடராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும், அதே கோரிக்கை வைக்கப்பட்டது. வருமானவரித்துறை வக்கீல் ராமசாமி, வருமானவரித்துறையிடம் கலந்து பேச வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்க கேட்டுக் கொண்டார். அதன்படி பிற்பகல் 2.15 மணி வரை விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்றுக் கொண்ட, மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி வழக்கு விசாரணையை, ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அப்போது வருமானவரித்துறை வக்கீல் ராமசாமி, 7ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, வருமானவரித் துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக, உரிய விவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
வக்கீல் ராமசாமியின் கோரிக்கையை ஏற்று, உரிய விவர அறிக்கையை, ஆகஸ்டு 7ஆம் தேதி அன்று தாக்கல் செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா நடராஜன் தரப்பிற்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications