For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று உலக செவிலியர் தினம்: வைகோ வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

International nurses day: Vaiko wishes women in white

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து"

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவர் போதிக்கின்றார்.

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சிக் கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொலுடனிவர் வலி கொடாத பேரை
ஏதேது செய்வானே

குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவிச்சி (தாதி) ஊதியத்தையும், தீர்க்க முடியாத பெரிய நோயைக் குணப்படுத்திய மருத்துவர் ஊதியத்தையும், இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி சொல்லும் சேதி.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவச் சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி. இராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள். இதை நினைவுகூர வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820-ஆம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாகும்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போர்க்களத்தில் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களை -- இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களை -- கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி தேவையான மருந்துகளை வழங்கி அவர்களைத் தேற்றி, அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்தம் குடும்பத்தினருக்குத் தெரிவித்து அவர்களது கவலைகளைப் போக்கி விரைந்து குணமடையச் செய்தார்.

இராணுவ வீரர்கள், தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது (Lady with lamp) என்று அகம் மகிழ்ந்து பாராட்டினர்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், பிரித்தானிய மன்னரின் ‘ஆர்டர் ஆப் மெரிட்' என்னும் உயரிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் மறைவிற்குப் பின்பு அவரது தன்னலமற்ற பணியை நினைவுகூர ஆண்டுதோறும் மே திங்கள் 12-ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்குக்கு ஒளி ஏற்றி அந்நாளில் அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும். ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய மாநில அரசுகள் மே-12 ஆம் நாளில் அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும். புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் உரித்தாக்குகின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko has wished the women in white ahead of the international nurses day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X