அண்ணாமலை கூட இணைச்சு இப்படியா பேசுவாங்க.. முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா பரபரப்பு புகார்
சென்னை: சமூகவலைதளங்களில் பார்வைகள் அதிகரிப்பதற்காக மலிவான கருத்துகளையும், அவதூறுகளை பரப்புவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் யூடியூபர் முக்தார், திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா மீது பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா புகார் அளித்தார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புப்படுத்தி தன்னைப் பற்றி இழிவாக பேசி அவதூறு பரப்புவதாக அவர் கண்ணீருடன் புகார் சொல்லியுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நான் அரசியலுக்கு வரும்போதே அவர்கள் என்னை பேசினார்கள். குரைக்கும் நாயை பேச வேண்டாம் என விட்டேன். இரண்டு வருடங்களாக அவர்களை என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என விட்டுவிட்டேன். அவர்களை நாய் போலத்தான் பார்த்தேன். இந்த விஷயத்தில் விட மாட்டேன். முக்தாரும், சூர்யா சிவாவும் இதைப் பற்றி பேசி சிரிக்கிறார்கள். எனக்கு புதிதாக பிறந்த குழந்தை புகைப்படத்தை, அண்ணாமலையின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு தவறாக பேசுகிறார்கள்.

முக்தார், சூர்யா சிவா மீது புகார்
டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்களா. அவர்களுக்கு அக்கா, தங்கை, மனைவி, குழந்தைகள் யாரும் இல்லையா. அவர்கள் யாரும் இதை பார்க்க மாட்டார்களா. இந்த மாதிரி ஆகக்கூடாது என நான் யோசித்தேன். 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் ஸ்டாலினை சந்தித்து போட்டோ எடுத்துள்ளனர். அப்படியென்றால் இதற்கு யார் உதவி செய்கிறார்கள். எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை. நான் மனதளவில் மிகவும் வலிமையானவள்.
இந்த மாதிரி யாருக்கும் ஆகக்கூடாது என்று என் அம்மா, மாமியாரும் சொன்னார்கள். என் குடும்பம் வலுவாக இருந்ததால் நான் புகார் கொடுக்க வந்துள்ளேன். ஸ்டாலின் குடும்பத்தை பற்றி எதுவும் பேசாத காரணத்தால் திமுக ஆட்சியில் அவர்களை கைது செய்யவில்லை. முக்தார், சூர்யா சிவா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால் நானே வேறு மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
நடவடிக்கை வேண்டும்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லை. இப்படி கேவலமாக பேசுபவர்களை எப்படி ஸ்டாலினும், உதயநிதியும் எப்படி சந்திக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் சார் குறித்தும் அவர்கள் கேவலமாக பேசுகிறார்கள். கமிஷனரிடமும் இதைப்பற்றி சொல்லியுள்ளேன். தமிழக மக்கள், பெண்கள் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications