சென்னை: குடியரசு தினவிழா அலங்கார ஊர்தியில் இரட்டை இலை..
சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊர்தியில் இரட்டை இலை இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அலங்கார ஊர்திக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 67வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அவரை தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா வருகை தந்தார்.
ஆளுநரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா, தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர், தாம்பரம் விமானப் படை அதிகாரி ரிப்பன் குப்தா, கடலோரக் காவல் படை கமாண்டர் எஸ்.பி.சர்மா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.அதேபோல், போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார், கூடுதல் தலைமை டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரையும் அறிமுகப்படுத்தினார்.

கொடியேற்றிய ஆளுநர்
காந்தி சிலை அருகே காலை, 8:00 மணிக்கு, ஆளுநர் ரோசய்யா, தேசியக் கொடியேற்றினார். பட்டொளி வீசிப் பறிந்த தேசியக்கொடி மீது விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவப்பட்டது. அதைத் தொடர்ந்து, முப்படை வீரர்கள், போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.

விருது வழங்கிய ஜெயலலிதா
இதையடுத்து, விருது வழங்கும் நிகழ்ச்சி, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது.

இரட்டை இலை
குடியரசு தின விழாவில், அரசு துறைகள் சார்பில், அரசு சாதனைகளை விளக்கும், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வந்த அலங்கார ஊர்தியில் இரட்டை இலையும், எம்.ஜி.ஆர் நினைவிடம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் குதிரையும் இருந்தது.

அலங்கார ஊர்திக்கு பரிசுகள்
சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசு, காவல் துறைக்கும்; இரண்டாவது பரிசு, செய்தித் துறைக்கும்; மூன்றாம் பரிசு, ஊரக வளர்ச்சித் துறைக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் நேரம் குறைப்பு
குடியரசு தின விழா, ஒரு மணி நேரத்தில் நிறைவு பெற்றது; அதற்கேற்ப, நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அலங்கார வாகன அணிவகுப்பிலும், 14 துறைகளின் வாகனங்கள் மட்டும் இடம்பெற்றன.

ஆளுநர் தேநீர் விருந்து
ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரோசய்யா, காலை, 11 மணிக்கு, தேநீர் விருந்து அளித்தார். அப்போது ஆளுநர், கொடிநாள் வசூலாக, ஒரு கோடி ரூபாய் வசூலித்த, சென்னை முன்னாள் ஆட்சியர் சுந்தரவள்ளி, காஞ்சிபுரம் முன்னாள் ஆட்சியர் சண்முகம் ஆகியோருக்கு வெள்ளிக் கேடயம் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
