ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஆஜராகாத அரசு வழக்கறிஞர்... அபராதம் விதித்த நீதிபதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை மார்ச் 7ம் தேதி தொடங்க வேண்டும் என நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
ஆனால் உடல்நிலை சரியில்லை எனக் கூறி அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இறுதிவாதம் தொடங்க அவருக்கு 3 முறை வாய்ப்புகளை நீதிபதி வழங்கினார்.
இருப்பினும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் உடல்நிலை முழுமையாக குணமடையாததால் இறுதி வாதம் செய்ய ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி குன்ஹா இறுதிவாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு அவருடைய ஒருநாள் ஊதியமான ரூ.60 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராகாததால் மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதியின் கோபம்
மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமையன்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை கட்டாயம் தொடங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்ததால், அனைவரும் இறுதிவாதம் தொடங்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கு அவர் முறையான காரணமும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் நீதிபதி டி'குன்ஹா கோபமடைந்தார்.

கண்டித்த நீதிபதி
வழக்கில் வாதிடுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இருந்து பெரும் தொகையை ஊதியமாக வழங்குகிறது. நீதிமன்றம் இறுதிவாதம் செய்யுமாறு பலமுறை பணித்தும், அரசு வழக்கறிஞர் தனது கடமையை ஆற்றாமல் தவிர்த்து வருகிறார். எனவே கடந்த முறை அவருக்கு ஒரு நாள் ஊதியத்தை அபராதமாக விதித்தேன்(ரூ.60 ஆயிரம்). அதனையும் பொருட்படுத்தாமல், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் காரணமே சமர்ப்பிக்காமல் இருக்கிறார். இதனை கடுமையாக கண்டிக்கிறேன்என்றார்.

இறுதி வாதம் தொடங்கியது
தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா பேசுகையில், ''சொத்துகுவிப்பு வழக்கை விரைவாக முடிக்கும்படி உச்சநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதனால் மார்ச் 21-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தவறாமல் முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து ஒருவழியாக அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார்.

பட்டியலிட்ட சொத்துக்கள்
எனினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நிமிடங்கள் மட்டுமே வாதிட்ட பவானிசிங், தனக்கு பதிலாக தனது உதவியாளருக்கு வாதிட அனுமதி அளித்தார். இதனையடுத்து வழக்கறிஞர்முருகேஷ் மரடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார். சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா. நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். (இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)

பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்
காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர். ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம் என பட்டியலிட்ட வழக்கறிஞர் அவற்றின் மதிப்பையும் கூறி மலைக்கவைத்தார்.

பல ஆயிரம் கோடி ரூபாய்
இந்தப் பட்டியல்படி, 1991-96 - இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூபாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார் என்றார்.

பிரம்மாண்ட திருமணம்
சொத்துப்பட்டியலை சொல்லி மலைக்க வைக்க அரசு வழக்கறிஞர், இந்தியாவே உற்று நோக்கிய வளர்ப்பு மகன் திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவை கூறினார்...
அது நாளை தொடரும்.












Click it and Unblock the Notifications