40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற உழையுங்கள்... தொண்டர்களுக்கு ஜெ. கடிதம்
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகின்ற 24-4-2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்கது
நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கம் எத்தனையோ லோக்சபா தேர்தல்களை சந்தித்திருக்கிறது.

நம் இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக 40 லோக்சபா தொகுதிகளிலும் கழகமே போட்டியிடும் வாய்ப்பினை இந்தத்தேர்தலில் தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, நமக்கு இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.
கடமையை செய்யுங்கள்
நாடாளுமன்ற லோக்சபா இது நாள் வரை இருந்திடாத அளவு கழகத்தின் சார்பில் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற தேனினும் இனிய செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொடி கட்டி பறக்கும் ஊழல்
தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணமும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
இந்த காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. 2004-ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.
விலைவாசி உயர்வு
இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற லோக்சபா பொதுத்தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது.
சாதனைகளை சொல்லுங்கள்
தமிழக வாக்காளப் பெருமக்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் கழக அரசின் சாதனைகளை; முன்னோடித்திட்டங்களை; வளர்ச்சித்திட்டங்களை; தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.
இளம் வாக்காளர்கள்
வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக தி.மு.க.வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் போன்றவற்றோடு நேரடி சந்திப்புகள் வழியாகவும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவரவேண்டும். மொத்தத்தில், கழக உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார பீரங்கியாக மாற வேண்டும்.
களப்பணியாறுங்கள்
வழக்கமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை போல, இந்த நேரடித்தொடர்பு பிரசாரமும் மும்முரமாக நடைபெற்றிட வேண்டும். அந்த அளவிற்கு நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவடையும் வரை விழிப்புடன் களப்பணியாற்றிட வேண்டும்.
40 தொகுதிகளில் வெற்றி
உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய இந்த அவாவினை மனத்தில் இறுத்தி நீங்கள் அனைவரும் பணியாற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே" என்பது, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு. எனவே, 40 லோக்சபா தொகுதிகளிலும் கழகத்தின் வேட்பாளராக, உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுவதாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் பங்கு
கழக வேட்பாளர்கள் அனைவரது வெற்றியிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் உண்டு; நாம் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு. கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் அண்மையில் இணைந்த உடன்பிறப்புகள் வரை, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வண்ணம், நீங்கள் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.
மகத்தான வெற்றி
‘40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்' என்ற மகத்தான செய்தி வரும் வரை கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications