3 தொகுதி இடைத்தேர்தலில் ஜெ., கருணாநிதி பிரச்சாரம் இல்லை: துணை ராணுவம் புதனன்று வருகை
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டாலும் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
மதுரை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்காக வரும் புதன் கிழமையன்று துணை ராணுவம் தமிழகம் வர உள்ளது. தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி உட்பட 14 பேரும், அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி உட்பட 39 பேரும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், திமுக வேட்பாளர் ப.சரவணன் உட்பட 28 பேரும் போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 12 தினங்கள் மட்டுமே உள்ளன. 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

ஜெயலலிதா - கருணாநிதி
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளார். இதனால், இந்த 2 முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் பிரச்சாரம் இல்லாமல் இந்த 3 தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுகவின் பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பல அமைச்சர்களும் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை தலைமையில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், வேலுமணி, காமராஜ் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஹைடெக் பிரச்சாரம்
நேரடி பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அதிமுகவின் ஐடி அணி ஐ பேட் சகிதமாக சுற்றி வருகிறது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என தங்களில் பிரச்சாரத்தை முடிக்கி விட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களை நடிகர், நடிகைகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புது புது யுக்திகளை பயன்படுத்தி வாக்காளர்களை கவர வேட்பாளர்களும் அரசியல்கட்சியினரும் பிரச்சாரம் செய்து வருவதால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

ஸ்டாலின், கனிமொழி பிரச்சாரம்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அவர் 10, 11 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தஞ்சாவூர் தொகுதியில் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் 10, 11 தேதிகளிலும், அரவக்குறிச்சி தொகுதியில் 13, 14 தேதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி.யும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிரேமலதா பிரச்சாரம்
மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் அரவக்குறிச்சியில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். 3 தொகுதி தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 12ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

பாமக ராமதாஸ்
திருப்பரங்குன்றம் தொகுதியில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால், அங்கு போட்டியிடவில்லை என பாமக அறிவித்துள்ளது. மற்ற 2 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் 13, 14 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

பாஜகவும் களத்தில் உள்ளது
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சாவூர் தொகுதியில் 9ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் 3 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

துணை ராணுவப் படை
3 தொகுதிகளிலும் மொத்தம் 700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 4,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் 3 தொகுதிகளுக்கும் வந்துள்ளனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக துணை ராணுவ படையினர் புதனன்று தமிழகம் வரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications