பொறுப்பேற்றார் ஜெ... 5 கோப்புகளில் முதல் கையெழுத்து.. மது விலக்கு குறித்த அறிவிப்பு இல்லை!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்திற்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
அதேபோல அமைச்சர்களும் தத்தமது அலுவலகங்களுக்குச் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.

முன்னதாக ஜெயலலிதா தனது முதல் கோப்பாக, மது விலக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தமிழகமே மதுவுக்கு அடிமையாகி அலங்கோலமாகிக் கிடக்கிறது. பெண்கள் எல்லாம் கதறி வேதனையில் மூழ்கிக் கொண்டுள்ளனர். பல குடும்பங்களில் குடியால் பெரும் கேடு வந்து வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. அறிவு மழுங்கிப் போய் மக்கள் தங்களது வாழ்க்கையை வாழ்வாதாரங்களை, குடும்பங்களை, மானத்தை இழந்து வருகின்றனர்.
மதுவுக்கு இன்று சிறுவர்களும் கூட அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களும் கூட இப்போது பகிரங்கமாக குடிக்க ஆரம்பித்து விட்டனர். பல நகரங்களில் பெண்களம் டாஸ்மாக் கடைகளுக்கு வந்து பகிரங்கமாக மது வாங்கிச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தனை அவலத்திற்கும் முக்கியக் காரணமே தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக் கடைகள்தான்.
இந்தக் கடைகளை மூட வேண்டும். தமிழக பெண்களைக் காப்பாற்ற வேண்டும், தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று காந்தியவாதி சசி பெருமாள் உள்பட பலரும் போராடி வருகின்றனர். மதுரையில் சட்ட மாணவி நந்தினி இடைவிடாமல் போராடி தொடர்ந்து கைதாகியும் வருகிறார். பாமக இந்த கொடிய பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறது. ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்தி வருகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளார். ஆனால் அரசுத் தரப்பிலிருந்து இதுவரை இதுகுறித்து எந்த அறிவிப்பும், பதிலும், விளக்கமும் வந்ததில்லை.
இந்த நிலையில் தற்போது முதல்வராகியுள்ள ஜெயலலிதா மது விலக்கு தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும், தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக அவர் வீடு திரும்பிவிட்டார். அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவை வீட்டில் சந்தித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தனது அலுவலகத்திற்குச் சென்று முதல்வர் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார். முதல் கோப்பிலும் கையெழுத்திட்டார்.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம், 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் என 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
மது விலக்கு தொடர்பான கையெழுத்தை அவர் போடாததும், அறிவிப்பு வெளியாகாததும் மது விலக்குக்காக போராடி வருவோருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications