அதிமுக 44வது தொடக்க விழா... ஸ்வீட் எடு.. கொண்டாடு.. ஊர் முழுவதும் கூட்டம் போடு.. ஜெ. உத்தரவு
சென்னை: அதிமுக தொடங்கி 44 ஆண்டுகளாவதைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் சிறப்புப் பொதுக்கூட்டங்களை நடத்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 17.10.2015 அன்று 44வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் அதிமுக 44வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களும், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17ம் தேதியன்று ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, கழகத்தின் 44வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
