காவிரிக்காகவா பாஜக அரசை ஜெ. கவிழ்த்தார்? அண்டப்புளுகு: மு.க.ஸ்டாலின்
நாமக்கல்: காவிரி நதிநீர் விவகாரத்தில்தான் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது அண்டப் புளுகு.. ஆகாசப்புளுகு என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் செ.காந்திசெல்வனை ஆதரித்து நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
பாண்டிச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார். அந்த கட்சி எந்த கூட்டணியில் உள்ளது என்று கேட்டால் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. அதே சமயத்தில் அதே பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. சார்பிலும் ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார். இதுதான் வேடிக்கை.

இதுவல்லவோ கூட்டணி
பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது யாரென்றால் நடிகர் விஜயகாந்த், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது யாரென்றால் பா.ஜ.க. ஆகா இப்படி ஒரு கூட்டணி, மெகா கூட்டணி என்ற பெயரில் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன்.

குரங்கு போல தாவும் ராமதாஸ்
ராமதாஸுக்கு ஜாதி பிரச்சினையை தூண்டி விட்டு குளிர் காய்வதுதான் வேலை. ராமதாஸ் எந்த சமூக நீதி போராட்டத்திலாவது கலந்து கொண்டாரா? இவர் எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்? குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

காவிரி இரு மாநில பிரச்சனை
கரூரில் ஜெயலலிதா பேசுகையில் திடீரென்று பாரதீய ஜனதா கட்சியை விமர்சிப்பதாக, தாக்கி பேசுவதாக எண்ணிக் கொண்டு ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் காவிரி பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை எனப் பேசியுள்ளார். நான் கேட்க விரும்புவது காவிரி நீர் பிரச்சினை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை.

விட்டுக் கொடுக்காத கர்நாடகா
கர்நாடகாவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீர் விவகாரத்தில் தங்கள் உரிமையை விட்டு கொடுத்ததே இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் காவிரி நீர் பிரச்சினையில் ஒற்றுமையாக இருக்கின்றன.
கலைஞர் அவர்கள் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை வளர்த்து வந்ததால், முழுமையாக இல்லாவிட்டாலும், விவசாயிகள் விவசாயம் செய்து ஓரளவு திருப்தி அடையக் கூடிய அளவுக்காவது காவிரி நீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அம்மையார் ஜெயலலிதா அப்படி இல்லாமல் பக்கத்தில் இருக்கக் கூடிய மாநிலங்களுடன் சண்டைகள் போட்டு, பிரச்சினைகளை வளர்த்து நீதிமன்றங்களுக்கு செல்லும் செல்லும் நிலையை உருவாக்கி வருவதால், நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு
இதே ஜெயலலிதா காவிரி நதி நீர் ஆணையத்தால் எந்த பலனும் இல்லை, அதனால்தான் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசை கவிழ்த்ததாக ஒரு மிகப்பெரிய பொய்யை, அண்டப் புளுகு - ஆகாசப் புளுகு என்பார்களே, அது போன்ற ஒரு பொய்யை தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்து இருப்பது பொய் என்பதற்கான ஆதாரம் என் கையிலேயே உள்ளது.

உண்மையில் ஆட்சியைக் கவிழ்த்தது ஏன்?
கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், பா.ஜ.க. ஆட்சியை கலைக்கப் போவதாக ஜெயலலிதா மிரட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும், அதற்கு காரணம் ஜெயலலிதா மீதான வழக்குகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதோடு, தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாகவும், அதனை தான் திட்டவட்டமாக மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதோ ஆதாரம்.. ஆதாரம்..
இதனை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என நான் சொல்லவில்லை. வாஜ்பாய் அவர்கள் பேசியுள்ள இந்த விவரங்கள் எல்லாம் அன்றைய தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல 23.9.1998-ல் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் எட்டாவது தீர்மானமே, "தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்பதுதான். அந்த தீர்மானத்தில், 356-வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, "கருணாநிதி தலைமையிலான மாநில ஆட்சியைக் கலைத்திட முன் வர வேண்டும் என இச்செயற்குழு வற்புறுத்துகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாக தீர்மானத்தில் கூறினார். தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவில்லை என்ற கோபத்தில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தாரே தவிர, காவிரி பிரச்சினைக்காக கவிழ்க்கவில்லை.

பா.ஜ.க. - அ.தி.மு.க. கள்ளத்தொடர்பு
அதேநேரத்தில் உங்களுக்கு இன்னொன்றையும் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை 13 மாதங்களில் கலைத்ததோடு, அப்போதைய துணை பிரதமரான அத்வானி அவர்களை செலக்டிவ் அம்னீசியா என்ற கொடுமையான மறதி நோய் கொண்டவர் என்றும் விமர்சித்தவர் ஜெயலலிதா என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
நான் கன்னியாகுமரியில் எனது பிரச்சாரத்தை தொடங்கி இப்போது நாமக்கல் வரை சென்ற இடங்களில் எல்லாம் நடைபெற்ற கூட்டங்களில் ஒன்றை தொடர்ந்து குறிப்பிட்டு கேட்டு வருகிறேன். பா.ஜ.க. - அ.தி.மு.க. வுக்கு இடையில் ரகசிய உறவு உள்ளது என்பதுதான் அது. இதற்கு பா.ஜ.க.வுடன் தொடர்பு இல்லை என வெளிப்படையாக அறிவிக்காமல், காவிரி நீர் விவகாரம் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இல்லை, இதே காரணத்துக்காக வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.அரசை கவிழ்த்ததாக ஜெயலலிதா பேசியுள்ளார். காவிரி நீர் பிரச்சினை என்பது இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

பாஜகவை விமர்சிக்காதது ஏன்?
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர்கள் விவகாரம், தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுபற்றி ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளாரா ?

கச்சத்தீவு, ராமர்கோவில் பற்றி ஏன் பேசலை?
கச்சத் தீவு குறித்து ஒரு வார்த்தை கூட பி.ஜே.பி. குறிப்பிடவில்லை, ராமர் கோயில் கட்டும் விவகாரம் ஆகியவை குறித்து ஜெயலலிதா ஏன் குறிப்பிடவில்லை ? 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடிப்பதில் பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா ஒத்து ஊதுகிறாரா ?

பொதுசிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் குறித்து ஜெயலலிதா எதுவும் குறிப்பிடவில்லையே ? நியாயமாக இதையெல்லாம் குறித்து கேட்க வேண்டியதை விட்டு விட்டு, இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பற்றி ஜெயலலிதா பேசுவதில் இருந்தே பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கள்ளத் தொடர்பு இருப்பது உறுதியாகிறது. அதை மறைக்கவே இப்போது ஜெயலலிதா நாடகம் நடத்துகிறார்.

பாஜக உறவை உறுதிப்படுத்தும் சோ
பத்திரிக்கையாளர் சோ, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக உள்ள மோடிக்கு நெருக்கமானவர். அதேபோல ஜெயலலிதாவுக்கும் நண்பர். அதுமட்டுமல்ல அவர் எனக்கும் நண்பர் என்பதோடு கருணாநிதிக்கும் நண்பராகவே இருக்கிறார். இன்று அவர் தனது பத்திரிகையில் வெளியிட்டு உள்ள செய்தியில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார் என்றால், பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும், மற்ற இடங்களில் அதிமுக விற்கு வாக்களிப்பது தான் நல்லது. மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஓட்டுப் பிளவைத் தான் உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுகளை போடுவதை விட, அந்த கூட்டணியில் இல்லாத அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்தே பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கள்ளதொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லையா ?

மோடி- ஜெ. நட்பு
குஜராத் முதல்வராக பொறுப்பு ஏற்றபோது அந்த நிகழ்ச்சிக்கு சென்றவர் ஜெயலலிதா. அதேபோல ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றபோது அதற்கு வந்தவர் மோடி. இதிலிருந்து என்ன வேறுபாட்டை நாம் காணவேண்டும் ?

இடதுகளை விரட்டிவிட காரணம் என்ன?
அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் கடைசி நிமிடம் வரை இருந்த இரு கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள். அவர்களை கூட்டணியில் இருந்து விரட்டி விடுகிறார்கள். என்ன காரணம் ? தேர்தல் உடன்பாட்டில் தகறாரா, தொகுதி பங்கீட்டில் தகறாரா ? தொகுதிகள் எண்ணிக்கையில் தகறாரா ? இல்லை.
ஆக இறுதியில் பா.ஜ.க. கூட்டணிக்கு இவர்கள் போகப் போகிறார்கள். கம்யூனிஸ்டுகள் இருந்தால் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக போக முடியாது என்பதால், கடைசி நேரத்தில் அவர்களை வெட்டி விடுகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

புது பாணி
ஆக இதையெல்லாம் மறைப்பதற்காக இப்போது கொஞ்சம் மாற்றி பேசியுள்ளார். புதிதாக ஒரு சப்ஜெக்டை பேசியுள்ளார். அது என்னவென்றால், எனக்கு எல்லாமே மக்கள்தான். எல்லாமே நீங்கள்தான், மக்கள் நலனே எனக்கு முக்கியம், என்று இப்போது முதல்வர் ஜெயலலிதா திடீரென்று இன்று பேசியிருக்கிறார்.

சொத்து குவித்தது ஏன்?
அவரை நான் கேட்கிறேன், எல்லாமே மக்கள் நலன் தான் என்றால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை இன்னும் ஏன் தொடரவில்லை? இதுதான் மக்கள் நலனா ? பஸ் கட்டணத்தை குறைப்பேன் என்றீர்களே? குறைத்தீர்களா? இதைத்தான் மக்கள் நலன் என்கிறீர்களா? 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுப்பேன்னு சொல்லிட்டு, இப்போ 10 ரூபாய்க்கு மினரல் வாட்டர் விக்கறீங்களே, இதுதான் மக்கள் நலனா? தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் கிட்டத்தட்ட 20 விவசாயிகள் வாழ வழியில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்களே, இதுதான் உங்கள் மக்கள் நலனா?
நான் இன்னும் கேட்கிறேன், பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் 5000 கோடிக்கும் மேல் நீங்கள் சொத்து குவித்து வைத்துள்ளதாக சொல்கிறார்களே , இதுதான் உங்கள் மக்கள் நலனா?
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications