மின்வெட்டுப் பிரச்சினை: ஏன் திரும்பத் திரும்ப திமுகவை குறை சொல்கிறார் ஜெ?... கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்வெட்டுப் பிரச்சினைக்கு தேவையில்லாமல் திமுகவைக் குறை சொல்லி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசைக் குற்றம் சாட்டியும், திமுகவைக் குற்றம் சாட்டியும் முதல்வர் வெளியிட்ட அறிக்கை மற்றும் ஏற்காடு பிரசாரத்தில் அவர் பேசிய பேச்சு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை

மின்வெட்டுக்கு திமுகவா காரணம்

மின்வெட்டுக்கு திமுகவா காரணம்

கேள்வி: மிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம் "தமிழகத்தை இருளில் தள்ள டெல்லி சதி" என்று ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்ப தோடு, முந்தைய தி.மு.க. அரசின் தொலை நோக்கின்மை, செயலின்மை என்றெல்லாம் உங்களையும் குறை கூறியிருக்கிறாரே?

பதில்: கடந்த 25-10-2013 அன்று சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு குறித்து, அந்தத் துறையின் அமைச்சருடைய கவனத்தை ஈர்த்து; கொண்டுவந்த தீர்மானத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா நீண்ட விளக்கமளித்தார்.

சாதனை படைத்திடும் சத்தியத் தாய்...

சாதனை படைத்திடும் சத்தியத் தாய்...

அந்தப் பதிலுக்கு அ.தி.மு.க. ஆளுங்கட்சியின் நாளேடு குறிப்பிட்ட தலைப்பு "சொன்னதைச் செய்து சாதனை படைத்திடும் சத்தியத் தாய்! தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்மிகை மாநிலமாகத் திகழும்! பேரவையில் முதல்வர் அம்மா உறுதி" என்பதாகும். பெரும்பாலும் அனைத்து நாளேடுகளுமே "தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்மிகை மாநிலமாகத் திகழும்" என்பதைத்தான் தலைப்பாக வெளியிட்டிருந்தன.

தேவையில்லாமல்...

தேவையில்லாமல்...

ஜெயலலிதாவின் அந்த உரையில் தேவையில்லாமல், "முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது" என்று குற்றம் சுமத்திய காரணத்தால் - அதற்கு மறுநாளே, அம்மையாரின் குற்றச்சாட்டுகளுக்கு "அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை; யாருக்கு?" என்ற தலைப்பில் "உடன்பிறப்பு மடலில்" - கழக ஆட்சியில் என்னென்ன மின் திட்டங்கள் தொடங்கப் பட்டன, அவற்றின் நிலை என்ன, எந்த அளவிற்கு தொலைநோக்கோடு, நிர்வாகத் திறமையோடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதையெல்லாம் சுமார் 2 பக்கங்களுக்கு விரிவாக எழுதியிருந்தேன்.

இதுவரை எத்தனை திட்டங்கள்...

இதுவரை எத்தனை திட்டங்கள்...

மேலும் குறிப்பாக என்னுடைய அந்தப் பதிலில், "அ.தி.மு.க. ஆட்சி 2011இல் தொடங்கி இரண்டரை ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட் டுள்ளது? 2011-2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், வடசென்னை நிலை 3, வட சென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின் நிலையத் திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012ஆம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா? கொள்கை விளக்கக் குறிப்பில், பக்கம் 12இல், 8000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களைத் தொடங்கப் போவதாக அறிவித்ததில், ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக் கிறதா? சொல்லத் தயாரா?

ஒதுக்கப்பட்ட நிதி என்னாச்சு...

ஒதுக்கப்பட்ட நிதி என்னாச்சு...

சென்ற சட்டமன்றத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்றாரே; அதற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யாரை ஏமாற்ற இந்தத் திட்ட அறிவிப்புகள்?" என்றெல்லாம் கேட்டிருந்தேன். எந்தப் பதிலும் இல்லை.

மத்திய அரசு மீது பழி போடுகிறார்

மத்திய அரசு மீது பழி போடுகிறார்

முதல்வர் ஜெயலலிதா, 26-11-2013 அன்று, முக்கிய அதிகாரிகளையெல்லாம் அழைத்துப் பேசி விட்டு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், "பெல்" நிர்வாகத்தின் கீழ் உள்ள என்.டி.பி.சி., போன்ற கூட்டுத் திட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் இயல்பாகச் செயலிழந்துவிட்டன என்பதைத் தமிழக மக்களால் சுலபமாக நம்ப முடியவில்லை; மத்திய பொதுத் துறை நிறுவனங்களால்தான் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதால் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய அரசு சதி செய்துள்ளது என்ற முடிவுக்குத் தமிழக மக்கள் வரக்கூடும்" என்று, மத்திய அரசின் மீது ஒரு பெரிய சதிக் குற்றத்தைச் சுமத்தியிருக்கிறார்.

திமுக மீது ஏன் பழி போடுகிறார்...

திமுக மீது ஏன் பழி போடுகிறார்...

மத்திய அரசுக்கு, மாநில அரசின் சார்பில் முதல்வர் கடிதம் எழுதுவதைப் பற்றி நமக்கொன்றும் இல்லை. ஆனால் தேவையில்லாமல், கடந்த அக்டோபரில் பேரவையில் விளக்கம் அளித்த போது தி.மு. கழக ஆட்சியின் மீது சாட்டிய குற்றச்சாட்டையே, திரும்பவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும், "முந்தைய தி.மு.க. அரசின் தொலைநோக்கின்மை மற்றும் செயலின்மை காரணமாக மின்சார தேவைக்கும், அளிப்புக்கும் இடையே 4,000 மெகாவாட் பற்றாக்குறை காணப்பட்டது" என்று எழுதியிருக்கிறார்.

அதற்குப் என்ன என்று சொல்வது...

அதற்குப் என்ன என்று சொல்வது...

அக்டோபரில் முதல்வர் இதே குற்றச்சாட்டினைப் பேரவையிலேயே கூறி, அதற்கு மறுநாளே நான் விரிவாகப் பதிலளித்த பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டினை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் எழுதியிருக்கிறார் என்றால், அதற்கு என்ன பெயர் என்று சொல்வது?

திசை திருப்பும் தந்திரம்

திசை திருப்பும் தந்திரம்

அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்காலும், அக்கறையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகள் முற்றி நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகும் போதெல்லாம், திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, ஜெயலலிதா மத்திய அரசின் மீதோ அல்லது தி.மு.கழக ஆட்சியின் மீதோ குற்றம் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்!

அமைச்சர் ராமலிங்கம் மீது ஆள் கடத்தல் புகார்

அமைச்சர் ராமலிங்கம் மீது ஆள் கடத்தல் புகார்

கேள்வி: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.வி.ராம லிங்கம் மீது ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆள் கடத்தல் புகார் கொடுக்கப்பட் டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசுதான் கூற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகாமி என்பவர், தன் சகோதரர், முத்துசாமி என்பவரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என். பிரகாஷ் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

முத்துச்சாமியை ஆஜர்படுத்துக

முத்துச்சாமியை ஆஜர்படுத்துக

நீதியரசர்கள், கடத்தப்பட்ட முத்துசாமியைக் கண்டுபிடித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஈரோடு மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, போலீசார் நீதிமன்றத்தில் முத்து சாமியை ஆஜர்படுத்தி, வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்தனர். இதைத் தொடர்ந்துதான் முத்துசாமி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினைக் கொடுத்ததாக செய்தி வந்திருக்கிறது.

எங்காவது ஓடி விடு..

எங்காவது ஓடி விடு..

அந்தப் புகாரில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் ஆட்கள் தன்னைக் கடத்திக் கொண்டு, அமைச்சரிடம் அழைத்துச் சென்றதாகவும், அமைச்சர், "நான் சொல்லும் நபருக்கு, உனது வீட்டை எழுதிக் கொடுத்து விட்டு, நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு, எங்காவது ஓடி விடு, இல்லாவிட்டால் உயிரோடு நீ இருக்க மாட்டாய்" என்று மிரட்டியதாகவும், பிறகு அவருடைய ஆட்கள் பணம் எதுவும் கொடுக்காமல் வீட்டை விற்றதாக கிரயப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதாகவும், பின்னர் அமைச்சர் உத்தரவுப்படியே 3 மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும், அங்கிருந்து தான் தப்பித்து வந்து விட்டதாகவும் தெரிவித்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.

புகுந்து விளையாடியிருக்கிறார்

புகுந்து விளையாடியிருக்கிறார்

விளையாட்டுத் துறை அமைச்சர் அல்லவா? புகுந்து விளையாடியிருக்கிறார்! அமைச்சர் மீது முதியவர் முத்துசாமி கொடுத்த புகாரில் இந்தக் கொடுமை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்து விட்டதாகவும், மனைவியின் மரணத்திற்குக் கூட நேரில் வர அஞ்சி தான் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

எத்தனைக் கொடுமைகளைச் செய்தார்கள்...

எத்தனைக் கொடுமைகளைச் செய்தார்கள்...

இதுபோன்ற புகார்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு. கழக அமைச்சர்கள் மீது வந்ததோ, வரவில்லையோ, அவர்களையெல்லாம் கைது செய்து எத்தனை கொடுமைகளைச் செய்தார்கள்? தற்போது காவல் துறை அதிகாரியிடம் அமைச்சர் மீது புகார் தரப்பட்டு, அது பற்றிய விவரம் ஏடுகளிலும் வெளிவந்திருக்கிறதே; இதற்குப் பதில் என்ன? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+