ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. ஜெ. சொன்ன திருடன் கதை!
சென்னை: சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா திருடன் கதை ஒன்றைச் சொல்லி அதிமுகவினரை சிரிக்க வைத்தார்.
ஜெயலலிதா சொன்ன கதை வெங்காயத் திருடன் குறித்ததாகும். அந்தக் கதையைக் கூறி அதன் நீதியையும் விளக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா சொன்ன அந்த வெங்காயத் திருடன் கதை...

ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக அந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில் அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான், ஒரு வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது எடுத்து செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை அள்ளி போட்டுக்கொண்டான்.

கப் என்று வந்து விழுந்த கை
புறப்படுகிற நேரத்தில் கப் என்று ஒரு கை வந்து விழுந்தது. ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று நிறுத்தி நடந்ததை கூறினர். அரசனும் என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா? என்று கேட்டார். ஆமாம் என்று திருடனும் ஒத்துக்கொண்டான். உடனே அரசன் திருடனை பார்த்து நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 கசையடி வாங்க வேண்டும் இல்லையென்றால் திருடிய வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த தண்டனை உனக்கு வேண்டும்? என்று கேட்டார்.

சாட்டை அடி கொடுங்கள்
சற்று சிந்தித்த திருடன், வெங்காயத்தை சாப்பிடுகிறேன் என்றான். வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. ஒரே எரிச்சல், தாக்கு பிடிக்க முடியவில்லை. இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணி விட்டான். அரசரை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது. பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள் என்றான். அரசரும் சரி என்றார்.

தாங்க முடியவில்லை
சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான். அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதுவும் எனக்கு சரிபட்டு வராது. 100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன் என்று கூறினான்.

இந்தக் கதையைப் போல
இந்த கதையைப் போல, இப்போது முதல்வர் வேட்பாளர் என மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனிமேல் இதுபோன்று எந்த தவறையும் செய்யமாட்டோம் என்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.

செய்த தவறு ஒன்றா இரண்டா...!
இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? காவிரிப்பிரச்சினை; முல்லைப்பெரியாறு பிரச்சினை; டெல்டா மாவட்டங்களையே பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்; நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது; இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா!

நமக்கு நாமே
அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு நமக்கு நாமே என்ற திருநாமத்தை சூட்டிக்கொண்டார். இந்த தலைப்பை அவரது தந்தை ஏன் கொடுத்தார் என்று அந்த நபர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். கருணாநிதி தனது தனயனிடம் "இனி இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நமக்கு நாமே கடமையாற்ற வேண்டும்" என்று சொன்னாராம்.

முடிவெடுத்து விட்டார் போலும்
அதாவது, அவர் சொல்வது என்னவென்றால் இந்த அதிமுக அரசு மக்களுக்கு பாதகமாக எதையும் செய்வதில்லை. எனவே, மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள் அதாவது, பதவியில் இருக்கும் அரசுக்கு எதிர்ப்பு என்ற சூழ்நிலை வரும் என இனியும் எதிர்பார்க்க முடியாது; எனவே நாம் வீதியில் இறங்கி நமது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டும் என முடிவெடுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் போலும்!

கூட்டணி அமைப்பேன்
இந்த பொதுக்குழு தீர்மானத்தின்படி, வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

2009 தேர்தலில்
தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம்.

2011 கூட்டணி
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளோம். அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்.

மீண்டும் வெற்றி பெறுவோம்
வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் தமிழக மக்களுக்கு சேவை புரிய ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்கு தொண்டர்களாகிய நீங்கள் இப்போதிருந்தே நம்மிடம் உள்ள வேற்றுமைகளைக் களைந்து களப்பணி ஆற்றிட வேண்டும். நமது அரசு ஆற்றியுள்ள அரும் பணிகள், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் தெளிவாக நீங்கள் விளக்கிட வேண்டும்.

தூய்மையானது.. நிலையானது
நமது எண்ணங்கள் தூய்மையானது; நமது செயல்கள் மக்கள் நலன் சார்ந்தது; எனவே நமது வெற்றியும் நிலையானது; உறுதியானது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று நாம் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, அதிமுக உறுப்பினர்கள்; தொண்டர்கள் ஒவ்வொருவரும் கழக வீரன் என்பதைச் சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். வீராங்கனை என்று சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். இது சாதாரணமான இயக்கம் அல்ல. எத்தனையோ இயக்கங்கள் இருக்கலாம். எத்தனையோ கட்சிகள் இருக்கலாம்.

வரலாறு
ஆனால், அதிமுக என்னும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஒரு தனி பெருமை உண்டு. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். நான் சொல்கிறேன்; இன்று சொல்கிறேன். எழுதி வைத்து கொள்ளுங்கள். இதுவரை இந்த இயக்கம் 6 முறை ஆட்சி அமைத்திருக்கிறது. தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். தலைமையின் கீழ் 3 முறை ஆட்சி அமைத்துள்ளது.

இனி எக்காலத்திலும் தோல்வி இல்லை
எனது தலைமையின் கீழ் 3 முறை ஆட்சி அமைத்துள்ளது. 6 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இயக்கம் இது. நான் சொல்கிறேன். இனிமேல் அதிமுகவிற்கு வெற்றி தான்; என்றுமே வெற்றி தான். இனி எந்தக்காலத்திலும் தோல்வி இல்லை. வெற்றி தான். இனி எந்தக் காலத்திலும் சிறுமை இல்லை; பெருமை தான். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications